Published : 22 Nov 2023 08:28 PM
Last Updated : 22 Nov 2023 08:28 PM
ராமேசுவரம்: கடலில் மீன்பிடி பணியின்போது ஏற்படும் விபத்துகளிலிருந்து மீனவர்களை காக்க, கடல் ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மீனவர்களுக்கு கடலில் ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டெல்லியில் கூடி விவாதித்தனர். அதில், உலக அளவில் இணைந்து, மீனவர் உரிமைக்கு குரல் கொடுத்துப் போராட, மீன்பிடித் தொழிலாளர்கள் பேரவை' என்ற அமைப்பை உருவாக்கினர்.
இந்த மாநாட்டில், மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தல், கடல் மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப் பால் மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப்பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உலக நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதன்பின்னர், நவம்பர் 21-ம் தேதி உலக மீன்வள, மீனவர் தினமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
மீனவர்களுக்கு ஏற்படும் பேரிடர்கள் மற்றும் விபத்துகள் குறித்து ஏ.ஐ.டி.யு.சி. மீனவத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் செந்தில்வேல் கூறியதாவது: மீனவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர். மீன்பிடித் தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கடல் சீற்றம், சூறாவளி, புயல் உள்ளிட்ட நாட்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
கடலில் மீனவர்கள் படகிலிருந்து தவறி கீழே விழுந்து காணாமல் போவது, நடுக்கடலில் இயந்திரக் கோளாறால் படகு தத்தளிப்பது, கடல்நீர் புகுந்து படகு கவிழ்வது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது, பாறைகளில் மோதுவது, நடுக்கடலில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் போவது என பல்வேறு வகைகளில் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் நடுக்கடலில் ஏற்படும் விபத்து மற்றும் நோய்களினால் ஆண் டுக்கு 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழக்கின்றனர். நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை பெரும்பாலும் மற்ற மீனவர்கள்தான் சென்று மீட்டு வருகின்றனர். இதற்கு பல மணி நேரம் அல்லது ஓரிரு நாட்கள்கூட ஆகின்றன. வளர்ந்த நாடுகள் கடல் ஆம்புலன்ஸ் சேவையை பல ஆண்டுகளாக வெற்றி கரமாக செயல்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக 2020-ம் ஆண்டில் கேரளாவில் கடல் ஆம்புலன்ஸ் படகு சேவை தொடங்கப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் படகின் நீளம் 23.80 மீட்டர், அகலம் 6 மீட்டர், 515 குதிரை திறன் கொண்ட என்ஜின் மூலம் இயங்கக்கூடியது. மணிக்கு 26 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இதில் அவசர உதவிக்கான மருத்துவ உபகரணங் களுடன், ஒரே நேரத்தில் 10 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். கேரள அரசு இந்த கடல் ஆம்புலன்ஸ் படகை கட்டுவதற்கு ரூ.6.80 கோடி செலவிட்டுள்ளது. தமிழக அரசும் இதனைப் பின்பற்றி, கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க, ஒவ்வொரு கடலோர மாவட்டத்திலும் கடல் ஆம்புலன்ஸ் வசதியை கொண்டு வரவேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT