Published : 22 Nov 2023 03:34 PM
Last Updated : 22 Nov 2023 03:34 PM
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படும் வாகனங்களால் உயர் நீதிமன்ற வளாகம் அவ்வப்போது செயற்கையான நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற வளாகம் சிஐஎஸ்எப் போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி உள்ள இதர வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இதுதவிர மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, வழக்கறிஞர்களின் சங்கங்கள், தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில், தீயணைப்பு நிலையம், காவல்நிலையம், ரயில்வே முன்பதிவு மையம், தபால் நிலையம், இந்தியன் வங்கி,வழக்கறிஞர்களுக்கான சேம்பர்கள், அரசு வழக்கறிஞர்களுக்கான அலுவலகங்கள், கேண்டீன் போன்றவையும் இதே வளாகத்தில்தான் இயங்கி வருகின்றன.
உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு தினமும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வழக்கறிஞர்கள் சராசரியாக வந்து செல்கின்றனர். தவிர வழக்கு நிமித்தமாக வந்து செல்லும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கெனவே உயர் நீதிமன்ற வளாகத்தில் கார் பார்க்கிங் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வழக்கறிஞர்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ள தனித்தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்பட்டாலும் அந்த இடம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் திரும்பிய திசையெல்லாம் வாகனங்கள் ஆங்காங்கே குண்டக்க, மண்டக்க நிறுத்தப்பட்டுள்ளன.
தெற்குப்பகுதி நுழைவுவாயில், வடக்குப்பகுதியில் உள்ள ஆவின் கேட் மற்றும் எம்பிஏ கேட் பகுதிகளில் வழக்கறிஞர்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எஸ்பிளனேடு நுழைவுவாயில் வழியாகவே அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், வழக்காடிகள் வந்துசெல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினரின் வாகனங்கள் அம்பேத்கர் சிலை மற்றும் ஆலமரம் பகுதிகளில் முழுமையாக நிறுத்தப்படும் நிலையில், ஒருசில வாகனங்கள் சாலையை அடைத்துக்கொண்டு ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதால் பின்னால் வரும் வாகனங்களும் ஒன்றன் பின்ஒன்றாக ஸ்தம்பித்து விடுகின்றன.
இதனால் மற்ற வாகனங்கள் உள்ளே வருவதற்கோ அல்லது வெளியேறவோ முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக நீதிமன்றம் ஆரம்பமாகும் காலை வேளை மற்றும் மதியஉணவு இடைவேளை மற்றும் நீதிமன்ற பணிகள் முடியும் மாலை நேரங்களில் இந்த நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக பெருநகர உரிமையியல் நீதிமன்றங்கள், முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளில் உள்ள குறுகலான வழித்தடத்தின் நடுவழியில் நிறுத்தப்படும் வாகனங்களால் அந்த வாகனங்களின் ஓட்டுநர்களைத் தேடி அலைய வேண்டியுள்ளது. இதனால் அவசரமாக நீதிமன்ற பணிகளுக்கு செல்ல நேரிடும் வழக்கறிஞர்கள், நெரிசலில் சிக்கி தங்களது கார்களின் கதவுகளைத் திறந்து கொண்டு நீதிமன்றங்களை நோக்கி ஓட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வரும் 90 சதவீத வழக்கறிஞர்கள் இருசக்கர வாகனங்களிலோ அல்லது நான்கு சக்கர வாகனங்களிலோதான் வந்து செல்கின்றனர். ஆனால்உயர் நீதிமன்ற வளாகத்தில் போதுமான கார் பார்க்கிங் வசதி இல்லை. பெண் வழக்கறிஞர்களுக்கோ, நீதிமன்ற ஊழியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, காவல்துறையினருக்கோ தனியாக பார்க்கிங் வசதிகள் இல்லை. இதனால் கிடைத்த இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திசெல்ல வேண்டியுள்ளது. அதேபோல உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்து செல்வோரும் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்துவதில்லை.
இதனால் நெரிசல் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு பெண் வழக்கறிஞர்கள் அவசர நேரங்களில் தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாதஅளவுக்கு திண்டாட வேண்டியுள்ளது. இருக்கும் காலி இடத்தை முறையாக பராமரிக்க நீதிமன்ற ஊழியர்களையும், போலீஸாரையும் பணியமர்த்த வேண்டும். விரைவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல பெண் வழக்கறிஞர்களுக்கும், உயர் நீதிமன்ற பெண் பணியாளர்களுக்கும் தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞரான ப.சஞ்சய் காந்தி கூறும்போது, ‘‘உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்துசெல்லும் வாகனங்களை முறைப்படுத்தி நெரிசலை குறைக்கவும், பார்க்கிங் குறைபாடுகளை சரிசெய்யவும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு தனித்தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு வந்து செல்லும் வழக்கறிஞர்கள் மற்றும் பிற அரசு அதிகாரிகள், காவல் துறையினரின் வாகனங்களின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்காக அதிகரித்துவிட்டது. இதனால் உயர் நீதிமன்ற வளாகத்தில் ‘மல்டி லெவல் கார்பார்க்கிங்’ வசதி செய்து கொடுக்க தமிழக அரசும், நீதித்துறையும் சேர்ந்து திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
உயர் நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்கறிஞர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தவும், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் வாகனங்களை நிறுத்துவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு அதற்கான பார்க்கிங் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வாகனங்கள் அவ்வப்போது இந்த இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. சிலர் நடுவழியில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. வழக்கு நிமித்தமாக உயர் நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும், அவற்றை மாற்று இடங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் ஏற்கெனவே போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து நீதித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காணப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT