Published : 22 Nov 2023 02:27 PM
Last Updated : 22 Nov 2023 02:27 PM
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 11-வது முறையாகும்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவருக்கு எதிராக 120 பக்க குற்றப் பத்திரிகையுடன் 3,000 பக்க ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ம் தேதி தாக்கல் செய்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், உடல்நிலை பாதிக்கபட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, அங்கிருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜார்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பது இது 11-வது முறையாகும்.
கடந்த விசாரணையின்போது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை வசம் உள்ள ஆவணங்களை வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவுக்கு அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்குக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டு, குற்றம்சாட்டபட்ட செந்தில் பாலாஜிக்கு வழங்கபட்டுள்ளது எனத் தெரிவிக்கபட்டது. இதனையடுத்து ஆவணங்களை கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT