Published : 22 Nov 2023 05:57 AM
Last Updated : 22 Nov 2023 05:57 AM

ஓமனில் கடத்தப்பட்ட தமிழரை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: ஓமனில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலிஸை மீட்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதம்: ஓமன் நாட்டின்துக்ம் துறைமுகத்தில் உள்ள நூஹ்மற்றும் யாயா, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்தார். மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் அவர்களிடையே பிரச்சினை நிலவி வந்தது.

இந்நிலையில், பெத்தாலிஸை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அவரை உடனடியாக கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கும்படி பெத்தாலிஸின் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பெத்தாலிஸை மீட்டு, தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ வலியுறுத்தல்: கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரமும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த பெத்தாலிஸ், ஓமனில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுடன் மீன்பிடிபடகில் பணியாற்றி வருகிறார்.சம்பளம் குறைத்து தரப்பட்டதால், உரிமையாளர் மற்றும் பெத்தாலிஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெத்தாலிஸ் கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக அங்குள்ள மீனவர்களுக்கு உணவு தரப்படவில்லை. இதுகுறித்து பெத்தாலிஸ் மனைவிக்கு உடன்சென்ற மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர். பெத்தாலிஸ் மனைவிஷோபாராணி, மீன்வளத் துறையினரிடம் தனது கணவரை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, தாங்கள் நேரடியாக தலையிட்டு, ஓமன் நாட்டு உயர்மட்ட அளவிலான அதிகரிகளுடன் பேசி, விரைவாக பெத்தாலிஸ் மற்றும் இதர மீனவர்களை அங்கிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x