Last Updated : 18 Jan, 2018 09:14 AM

 

Published : 18 Jan 2018 09:14 AM
Last Updated : 18 Jan 2018 09:14 AM

எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் புதிய சேவை தொடக்கம்: புதிய தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்பு

தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் சார்பில், ஆன்லைன் மூலம் வர்த்தக வாய்ப்புகளை தேடுவதற்கான புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அவை சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன. அத்துடன், இத்துறை மூலம் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக புதிய தலைமுறை தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துதல், தொழிலாளர்களுக்கு திறமையான பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், மற்றொரு புதிய சேவையாக ஆன்லைன் மூலம் வர்த்தக வாய்ப்புகளை தேடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்களை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அரசு கடந்த 1954-ம் ஆண்டு தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகத்தை ஏற்படுத்தியது. இத்துறையின் மூலம், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 45 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வர்த்தக வாய்ப்புகளை தேடுவதற்கான புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டைரி இடம் பெற்றுள்ளது. அத்துடன், அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தங்களுடைய பொருட்களை வாங்குவதற்கான வர்த்தகர்கள் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருக்கும். அதேபோல், ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டு வர்த்தகர்களிடம் பொருட்களை விற்கும்போது மொழிப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அவர்களது மொழியிலேயே விற்பதற்கான உதவியும் இந்த இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன. மேலும், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எந்த நாட்டில் சந்தை வாய்ப்பு உள்ளது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. www.msmemart.com என்ற இணையதள முகவரி மூலம் மேற்கண்ட சேவைகளை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x