Published : 21 Nov 2023 08:05 PM
Last Updated : 21 Nov 2023 08:05 PM

டாஸ்மாக் வருவாய் இழப்பு | ஜி.கே மணி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டது, பேருந்துகள் ஓடாதது ஆகியவற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பொது சொத்துக்கு ஏற்பட்ட சேதத்துக்கான இழப்பாக கருதி இழப்பீடு கோர முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரத்தில், கடந்த 2013ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீவைக்கப்பட்டன. பா.ம.க-வினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டதுடன், பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே மணிக்கு அரசு போக்குவரத்துக் கழகமும், டாஸ்மாக் நிர்வாகமும் நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஜி.கே மணி 2014-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, விசாரணையில் தலையிட மறுத்து, நோட்டீஸுக்கு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜி.கே.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2022-ம் ஆண்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது, பேருந்துகள் ஓடாதது ஆகியவற்றால் வருவாய் இழப்பு என கூறி அதிகார வரம்பு இல்லாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பொதுச்சொத்து சேத தடுப்புச் சட்டப்படி குற்றமாக இருந்தால்தான் இழப்பீடு கோர முடியும் என்றும், ஆனாலும் இதுதொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். சொத்து சேதம் ஏதும் இல்லாத நிலையில், இழப்பு ஏற்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அந்த நோட்டீஸும் கட்சிக்கு அனுப்பாமல், தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, "இதுபோல விளக்கம் கேட்டு அனுப்பப்படும் நோட்டீஸ் மீது நீதிமன்றம் தலையிடுவதில்லை" என குறிப்பிட்டது. "இந்த வழக்கை பொறுத்தவரை மதுக்கடைகளும், பேருந்துகளும் செயல்பட முடியவில்லை என கூறி, இழப்பு ஏற்படுத்தியதாக கூறுவது குறித்து அதிகாரிகள்தான் பரிசீலிக்க வேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், வழக்குகளில் இருந்து விடுதலை ஆனதையும், வருவாய் இழப்பை பொது சொத்து சேதமாக கருத முடியுமா என்பதையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசு அனுப்பிய நோட்டீஸ் மீது மனுதாரர் தனது கூடுதல் பதிலை 15 நாட்களில் அளிக்க வேண்டுமெனவும், அதை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x