Last Updated : 21 Nov, 2023 08:14 PM

 

Published : 21 Nov 2023 08:14 PM
Last Updated : 21 Nov 2023 08:14 PM

காஞ்சிபுரம் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: உத்திமேரூரை அடுத்த திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் பிடிக்கப்பட்ட குடிநீரில், கடும் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி. சுதாகர் ஆகியோர் குடிநீர் தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்த திருவந்தவார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், அப்பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து குடிநீர் பெற்று பள்ளியில் மதிய உணவு சமைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கண்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து பள்ளியில் மதிய உணவு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தொட்டியிலிருந்து பிடிக்கப்பட்ட தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியதாகவும், இதனால், சந்தேகமடைந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்காமல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குடிநீர் தொட்டியில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக, தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி. சுதாகர் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். இதையடுத்து, குடிநீர் தொட்டியில் இருந்த பிடிக்கப்பட்ட தண்ணீர் துர்நாற்றம் வீசியதால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடுநிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, பள்ளியின் குடிநீர் தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதில், தொட்டியின் உள்ளே முட்டை இருப்பது தெரிந்தது. தொட்டி திறந்த நிலையில் இருப்பதால், ஒருவேளை காக்கை போன்ற பறவைகள் கொண்டு வீசியிருக்கலாம் என கருதுகிறோம். மேலும், இந்த தொட்டியின் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

பள்ளி வளாகத்தில் வேறு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் தண்ணீரை மாணவர்கள் பெரும்பாலும் கை கழுவுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனால், இந்த தொட்டியை இடிக்குமாறு தெரிவித்துள்ளேன். இதுதொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x