Last Updated : 21 Nov, 2023 04:40 PM

 

Published : 21 Nov 2023 04:40 PM
Last Updated : 21 Nov 2023 04:40 PM

''போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்'' - புதுச்சேரி அரசுக்கு நாராயணசாமி வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: "புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ஆட்சியாளர்கள் மீனவ சமுதாய மக்களை புறக்கணிக்கிறார்கள். மத்திய பாஜகவும், புதுச்சேரி பாஜக அரசும் உலக மீனவர் தினத்தையும், மீனவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவிப்பதையும் அரசு விழாவாக கொண்டாடுவதில்லை. மீனவ சமுதாய மக்களுக்கு மத்திய அரசில் இருந்து நிறைய திட்டங்களை கொடுக்கிறோம் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தேர்தல் வரும் நேரத்தில் மீனவர்கள் மத்தியில் பல விழாக்களை நடத்தி மீனவ மக்களை ஏமாற்றி வருகிறார்.

மீனவ சமுதாய மக்களை அதல பாதாளத்தில் மத்திய பாஜக அரசும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாஜக கூட்டணி அரசும் தள்ளியிருக்கிறது. புதுச்சேரியில் வன்னியர், பட்டியலினத்தவர்களுக்கு அடுத்தபடியாக மீனவ சமுதாய மக்கள் பரவலாக இருக்கின்றனர். ஆகவே மீனவ சமுதாய மக்கள் தங்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் ஆட்சியில் முன்வைத்தார்கள். அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்த போது அப்போது ஆளுநராக இருந்த கிரண் பேடி அதனை ஏற்கவில்லை.

இப்போது மீனவ சமுதாய மக்கள் அந்த கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவ சமுதாய அமைப்புகள், பல அரசியல் கட்சியில் உள்ள மீனவ சமுதாய தலைவர்கள், தொண்டர்கள் புதுச்சேரியில் மீனவ சமுதாய மக்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க காலதாமதம் ஆகும் என்ற காரணத்தால் அவர்களை மறுபடியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

புதுச்சேரியில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தியாவில் பிஹார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து சாதி வாரியாக வேலை வாய்ப்பு, கல்வியில் சலுகை வழங்க முடிவெடுத்து நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ரங்கசாமி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜக சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக எதிர்கின்றது. அதற்கு காரணம் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சலுகைகளை முழுமையாக அனுபவிக்க வேண்டும். மற்ற சமுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கக் கூடாது என்பதுதான். சாதி வாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்திலும் சலுகை வழங்குவது என்ற நிலை இந்தியா முழுவதும் வந்திருக்கிறது.

முதல்வர் ரங்கசாமியால் பல மாதங்களோ, பல நாட்களோ இதை தள்ளிப்போட முடியாது. இதற்கான கோப்பு ஏற்கெனவே பரிசீலனையில் இருக்கிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆகவே முதல்வர் ரங்கசாமி போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் சாதி, விகிதாச்சார அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x