Published : 21 Nov 2023 06:40 PM
Last Updated : 21 Nov 2023 06:40 PM
மதுரை: மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளில் பல இன்னும் முடியாமலும், மக்கள் பயன்பாட்டுக்கு வராமலும் பாதியில் நிற்கும் நிலையில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் மதுரை 8-வது இடம் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2015-ம் ஆண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. நாட்டின் 100 நகரங்களில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளையும், பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டது. தமிழகத்தில் மொத்தம் 11 நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் நகரின் ஒரு பகுதியை தேர்வு செய்து அப்பகுதியில் அனைத்து வசதிகளும் கிடைக்கக்கூடிய ‘ஸ்மார்ட் சிட்டி’ பகுதியாக மாற்றவும், போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஸ்மார்ட்வாகனப் போக்குவரத்து அமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக கொண்டு ரூ.899 கோடியில் 16 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெரியார் பேருந்து நிலையத்தையும், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தையும் இடித்துவிட்டு நவீன வசதிகளுடன்கூடிய பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் அருகிலும், பெரியார் பேருந்து நிலையத்திலும் பல்லடுக்கு பார்க்கிங் வசதி, தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையம், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலைகள், மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி புதிய சாலைகள், குன்னத்தூர் சத்திரம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இந்த திட்டங்களை நிறைவேற்றியது தொடர்பாக மதுரை மாநகராட்சி சமர்ப்பித்த ஆவணங்கள், ஆய்வு அடிப்படையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி தரவரிசை பட்டியலில் மதுரை நாட்டிலேயே 8-வது இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்பணிகளில் ஒன்றுகூட தரமாக நடக்கவில்லை. இதனை கடந்த அதிமுக ஆட்சியின்போதே சு.வெங்கடேசன் எம்.பி., பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் குற்றம் சாட்டினர். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பேசிய பழனிவேல் தியாகராஜன், ‘அதிமுக ஆட்சியில் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அனைத்தும் தவறாக ஆரம்பிக்கப்பட்டன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தனித் தலைவர் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏவை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆட்சியில் அந்த கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களிடம் கூட, இந்தத் திட்டம் தொடர்பாக ஆலோசனை கேட்கப்படவில்லை. 3 முன்னாள் அமைச்சர்கள் சம்பாதிப்பதற்காகவும், அவசர அவசரமாக ஊழல் செய்வதற்காகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது’ என்று குற்றம்சாட்டினார்.
பெரியார் பேருந்து நிலையம்: பெரியார் பேருந்து நிலையம் ஆரம்பத்தில் திட்டமிட்டபடி கட்டப்படவில்லை. இந்த பேருந்துநிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், மல்டிலெவல் பார்க்கிங் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பேருந்து நிலையம் இடநெருக்கடியில் செயல்படுவதால் முன்பைவிட போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மழைநீர் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாததால் மிதமானமழை பெய்தாலே பெரியார் பேருந்து நிலைய பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது.
மீனாட்சியம்மன் கோயில்: அதேபோல், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கோயிலை சுற்றியுள்ள சாலைகள் அகலப்படுத்தப்படவில்லை. மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. மழைக் காலத்தில் கோயிலை சுற்றி தண்ணீர் தேங்குகிறது. பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.
வைகை ஆறு: வைகை ஆற்றை தூய்மைப்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், வைகை ஆற்றின்இருபுறமும் சாலைப் பணிகள் தற்போது வரை நிறைவு பெறவில்லை. சாலைகள் ஆங்காங்கே துண்டு, துண்டாக நிற்கின்றன. நகரப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போடப்பட்ட இந்த சாலையை மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. மாறாக இந்த சாலைகளின் இருபுறமும் குப்பை தேங்கியுள்ளன. ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை. நகரில் தேங்கும் மழைநீர் வழிந்தோட ஆற்றின் இருபுறம் உள்ள தடுப்புச்சுவரில் வசதி செய்யப்படவிலலை.
தமுக்கம் மாநாட்டு மையம்: அதேபோல், பாரம்பரியமிக்க தமுக்கம் மைதானம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பொலிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மைதானத்தில் ரூ.47.72 கோடியில் கட்டப்பட்டதாக கூறப்படும் மாநாட்டு மையம் தரமாக இல்லை. அதனால், இங்கு தற்போது கண்காட்சிகள் மட்டுமே நடக்கின்றன. ெபரிய அளவிலான கருத்தரங்கு போன்றவற்றை தனியார் நிறுவனங்கள் நடத்த முன்வரவில்லை. இதனால் பெரும்பாலான நாட்கள் இந்த மாநாட்டு மையம் மூடியே கிடக்கிறது. இதுபோல் ஏராளமான குறைபாடுகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப் பட்ட பிறகு மதுரை புதுப்பொலிவு பெறும், சிட்னி நகரம் போன்று மாறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்திருந்தார். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்திய பிறகு மதுரை தன்னுடைய இயல்பு நிலையையும், பாரம்பரியத்தையும் இழந்து நிற்பதுதான் நிதர்சனம். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவும் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படி எண்ணற்ற குற்றச்சாட்டுகள், சர்ச்சைகளுக்கிடையே எந்த அடிப்படையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும் நகரங்கள் தரவரிசை பட்டியலில் 8-வது இடத்தை மதுரை பிடித்தது என்பது புரியாத புதிராக உள்ளது. மதுரை நகர் நாட்டில் 8-வது இடத்தை பிடித்ததில் திமுகவைச் சேர்ந்த மேயர், அமைச்சர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘மதுரை 8-வது இடம் பிடித்தது பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு கிடைத்தநற்சான்று’ என்று தெரிவித்துள்ளார். வெறும் ஆவணங்கள், ஆன்லைனில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் இப்படி தரவரிசை பட்டியலை நிர்ணயிக்கலாமா? அது சரியாக இருக்குமா என்ற கேள்வியும் சர்ச்சையும் கூடவே எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT