Published : 21 Nov 2023 02:24 PM
Last Updated : 21 Nov 2023 02:24 PM
சென்னை: ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெத்தாலி என்பவரை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பவரை மீட்டுக் கொண்டுவரவும், ஓமனில் மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த மீனவக் குழுவினரின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் , மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (நவ.21) கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்தார். அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது. இந்த நிலையில், பெத்தாலிஸ்ஸை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அவரை உடனடியாகக் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலிஸ் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளதை, கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஓமன் நாட்டிலுள்ள, இந்தியத் தூதரகம் மூலம் பெத்தாலியை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT