Published : 21 Nov 2023 01:33 PM
Last Updated : 21 Nov 2023 01:33 PM

என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும்: அன்புமணி ராமதாஸ் சாடல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்

சென்னை: "நிலம் கொடுத்தவர்களை கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு ஏமாற்றி வரும் என்எல்சியும், தமிழக அரசும் இணைந்து மூன்றாவது நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு சுரங்கத் திட்டங்களுக்கு விவசாயிகளின் நிலங்களை பறிக்கத் திட்டமிட்டுள்ளன. என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும், நன்மைகள் விளையாது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடலூர் மாவட்டம் நெய்வேலியில் முதன்முதலில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்ட போது, அதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய கிராமங்களில் வழங்கப்பட்ட 3543 வீட்டு மனைகளுக்கான பட்டாக்களை 64 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கியிருக்கிறார். நிலம் கொடுத்த மக்களுக்கு இவ்வளவு விரைவாக நீதியும், பட்டாவும் வழங்கப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.

என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய நீதியும் கிடைப்பதில்லை; உரிய விலையும் கிடைக்கவில்லை; வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று பாமக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. பாமகவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதிலும், பட்டாவை பெற்றுத் தருவதிலும் கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்பதும் இப்போது உறுதியாகியிருக்கிறது.

நிலக்கரி சுரங்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு 1959-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான் விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய இடங்களில் குடியிருக்க மனைகள் ஒதுக்கப்பட்டன. அவற்றுக்கான பட்டாவும் உடனடியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன்பிறகு காங்கிரஸ் கட்சி 7 ஆண்டுகளும், திமுக 25 ஆண்டுகளும், அதிமுக 30 ஆண்டுகளும் ஆட்சி செய்திருக்கின்றன. இந்தக் காலங்களில் நிலம் கொடுத்த மக்களுக்கு பட்டா வழங்க எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசுகள் மேற்கொள்ளவில்லை. இதுவா சமூகநீதி?

இப்போதும் கூட, நிலம் கொடுத்து விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய கிராமங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டதற்கான பெருமை இந்த அரசை சேராது. நெய்வேலி மூன்றாவது சுரங்கத்துக்கும், முதலாவது மற்றும் இரண்டாவது சுரங்கங்களின் விரிவாக்கத்துக்காகவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாமக நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் போது, என்எல்சிக்கு முதன்முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு பட்டா வழங்கப்படாதது குறித்து நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தேன். அதன்பயனாகவே 2022-ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டு நிலவரிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.

நிலம் கொடுத்தவர்களை கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு ஏமாற்றி வரும் என்எல்சியும், தமிழக அரசும் இணைந்து தான் அடுத்தக்கட்டமாக மூன்றாவது நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு சுரங்கத் திட்டங்களுக்கு விவசாயிகளின் நிலங்களை பறிக்கத் திட்டமிட்டுள்ளன. மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்க வலியுறுத்தியும் அது குறித்து வாய்திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்து வருகிறார். என்எல்சிக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு தீமைகள் மட்டுமே விளையும், நன்மைகள் விளையாது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு , மூன்றாவது சுரங்கத்துக்கு தமிழக அரசு துணை போய் மக்களுக்கு அநீதி இழைத்து விடக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x