Published : 21 Nov 2023 08:28 AM
Last Updated : 21 Nov 2023 08:28 AM
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் விசாரணைக்கு ஆஜரானார்.
தமிழக அரசின் நீர்வளத் துறையின் சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரி மையங்கள் மற்றும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்கள் எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஆடிட்டர் பி.சண்முகராஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னையை பொறுத்தவரை எழிலகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகம் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அறையிலும் சோதனை நடந்தது. இதில் ரூ.12.82 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.2.33 கோடி பணம் மற்றும் ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஆற்று மணல் அள்ளுவதில் அரசு உயர் அதிகாரிகள் முறையான கண்காணிப்பில் ஈடுபடவில்லை என்றும், அவர்களின் ஒத்துழைப்போடுதான் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் உள்பட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா முதற்கட்டமாக நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆற்று மணல் அள்ளப்பட்டதா? என்ற கோணத்தில் கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.
அந்தவகையில், தமிழகத்தில் செயல்பட்டுவரும் மணல் குவாரிகளுக்கு எந்த அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது? அவை எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? தமிழகத்தில் எத்தனை குவாரிகளுக்கு மணல் அள்ளுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை இந்த விசாரணையின்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை விசாரணை நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT