Published : 21 Nov 2023 08:33 AM
Last Updated : 21 Nov 2023 08:33 AM

உண்மை சரிபார்ப்பு குழுவை அரசு அமைத்ததில் என்ன தவறு? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: தவறான செய்திகளை கண்டறிய, தமிழக அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு உள்ளது என மனுதாரரான அதிமுக நிர்வாகிக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இக்குழு நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை டிச.6-க்கு தள்ளிவைத்துள்ளது.

அனைத்து ஊடக தளங்களிலும் தமிழக அரசு, அமைச்சகங்கள் மற்றும் துறை தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான பொய்ச் செய்திகளை கண்டறியும் வகையில், தமிழக அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின்கீழ் ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ என்ற ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயனை தமிழக அரசு நியமித்துள்ளது. இவருக்கு மாத சம்பளமாக ரூ.3 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளரான சி.டி.நிர்மல்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசுக்கே அதிகாரம்: மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஆஜராகி, “உண்மை சரிபார்ப்புக் குழுவை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசுக்கு கிடையாது. இதுதொடர்பாக மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டிலேயே விதிகளை வகுத்துள்ளது. தற்போது தமிழக அரசு அமைத்துள்ள இந்தக் குழு தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு முரணானது.

இக்குழுவின் திட்ட இயக்குநர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசின் நடவடிக்கை பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. உண்மை சரிபார்ப்புக் குழு என்பது அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதமாகிவிடும்” என வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பொய்ச் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசு இதுபோல நடவடிக்கை எடுக்க முடியாதா? இதுவும் ஒரு சரிபார்ப்பு முறைதானே? இதில் என்ன தவறு உள்ளது? போலீஸாருக்கு உதவும் விதமாகத்தானே இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “பொய்ச் செய்தி பரப்பியதாக மனுதாரர் மீது ஏற்கெனவே குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த தகுதியும் கிடையாது” என்றார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், “தமிழகத்தில் பிஹார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான செய்திகள் சமூக ஊடங்களில் பரப்பப்பட்டதால் வடஇந்தியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. அதுபோன்ற சூழல் மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத்தான் தகுதியான நபரின் தலைமையின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுபோன்ற உண்மை சரிபார்ப்புக் குழுவை மத்திய அரசும் நியமித்துள்ளது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. அந்த வழக்கின் முடிவை தெரிந்து கொண்டு அதன்பிறகு இந்த வழக்கை விசாரிப்போம் எனக் கூறி விசாரணையை டிச.6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x