Published : 21 Nov 2023 06:00 AM
Last Updated : 21 Nov 2023 06:00 AM

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் எடுத்ததால் பாதிக்கப்பட்ட 3,543 பேருக்கு பட்டா: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் எடுத்ததால் பாதிக்கப்பட்டவர்களின் 60 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 3,543 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பட்டாக்களை வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நெய்வேலியில் பழுப்புநிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அதனால் பாதிக்கப்பட்டமக்கள் 1959-ல் விருத்தாசலம் வட்டம் விஜயமாநகரம் மற்றும்புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இவ்வாறு மறுகுடியமர்த்தப்பட்ட கிராம நிலங்களில் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், வருவாய்த் துறையால் கடந்த ஆண்டு மே 26-ம்தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, 3 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் வருவாய் நிலவரித் திட்டப் பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி, விருத்தாசலம் கோட்டாட்சியர் தலைமையில் நிலவரித் திட்ட அலகு ஏற்படுத்தப்பட்டு, நிலவரித் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டன.

இதையடுத்து, விஜயமாநகரம் கிராமத்தில் 2,676 பேருக்கு 1,371 பட்டாக்கள், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 867 பேருக்கு 475 பட்டாக்கள் என மொத்தம் 3,543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் 7 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டாக்களை நேற்று வழங்கினார். மேலும், ரூ.14.86 கோடியில் கட்டப்பட்டுள்ள திருவட்டாறு, கிள்ளியூர் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள், தேனியில் கூட்ட அரங்கக் கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதுதவிர, நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில்சென்று விண்ணப்பிக்க வேண்டும்என்ற நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை செய்ய ‘https://tamilnilam.tn.gov.in/citizen’ என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் முதல்வர்நேற்று தொடங்கிவைத்தார்.

இணைய வழியில் பெறலாம்: இதன் மூலம், நில அளவைசெய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன்வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர், மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் இணையவழியில் பெறலாம். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், ஆர்.காந்தி, சி.வி.கணேசன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நில நிர்வாக ஆணையர் சு.நாகராஜன், வருவாய்த் துறைச் செயலர் வே.ராஜாராமன், நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x