Published : 31 Jan 2018 09:36 AM
Last Updated : 31 Jan 2018 09:36 AM
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.8 கோடி செலவில், 93 இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ‘4ஜி வைஃபை ஹாட் ஸ்பாட்’ சேவையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் இச்சேவை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் 11 லட்சம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்களும், 5 லட்சம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களும் உள்ளனர். பொதுமக்கள் இணையதள சேவையை பயன் படுத்தி மின்கட்டணம், தொலைபேசி கட்டணம், வீட்டு வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை வீட்டில் இருந்தபடியே செய்து வருகின்றனர். இதைத் தவிர, பல்வேறு தேவைகளுக்காகவும் இணைய தள சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது இணையதள சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. தற்போது நாளொன்றுக்கு 100 டெரா பைட் அளவுக்கு டேட்டா டிராபிக் உள்ளது.
இந்நிலையில் நகரம், கிராமம் என அனைத்துத் தரப்பு மக்களும் இணையதள வசதியை பயன் படுத்தும் நோக்கில் பிஎஸ்என்எல் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள், அதிகளவில் கூடும் இடங்களில் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனத்தின் பொதுமேலாளர் (வளர்ச்சி) மாலினி ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
பொதுமக்களின் வசதிக்காக பொது இடங்களில் ‘வைஃபை ஹாட் ஸ்பாட்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்கா, மருத்துவமனை, பேருந்து, ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இவை அமைக்கப்பட்டு வருகின்றன. பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன் நிறுவனம் சார்பில், கடந்த ஜூன் மாதம் ‘4ஜி பிளஸ் வைஃபை ஹாட் ஸ்பாட் சேவை’ தொடங்கப்பட்டது. ரூ.4 கோடி செலவில் சென்னை நகரில் 43 இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 20 கிராமப்புற பகுதி களிலும் இந்த சேவை தொடங்கப்பட்டது.
இதையடுத்து, 2-வது கட்ட மாக ரூ.8 கோடி செலவில் 93 இடங்களில் 4ஜி பிளஸ் வைஃபை ஹாட் ஸ்பாட் அமைக்கப்பட உள்ளது. இதில், சென்னை நகரில் திருவல்லிக்கேணி, அண்ணாநகர், வில்லிவாக்கம், பெரம்பூர், மதுரவாயல், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 63 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட 30 இடங்களிலும் இவை அமைக்கப்பட உள்ளன. வரும் மார்ச் மாதத்துக்குள் இவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
பிஎஸ்என்எல் 4ஜி பிளஸ், பிஎஸ்என்எல் வைஃபை மற்றும் பிஎஸ்என்எல் பிராட்பை என மூன்று வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி டேட்டா பிளானைப் பயன்படுத்தும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் 4ஜி பிளஸ் சேவையை பயன்படுத்த முடியும்.
பிஎஸ்என்எல் வைஃபை சேவையை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பிற தொலைபேசி நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் பயன்படுத்தலாம். நகர்புறத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் முதன்முறையாக இச்சேவையை பயன்படுத்தும் போது 100 எம்பி டேட்டாவும், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு 4 ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப் படும். மேற்கொண்டு பயன் படுத்த ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த வைஃபை ஹாட் ஸ்பாட் சேவையை உபயோகிக்க குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக 1,999 ரூபாய் வரையிலான பல்வேறு திட்டங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT