Published : 20 Nov 2023 04:43 PM
Last Updated : 20 Nov 2023 04:43 PM
சென்னை: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இப்புதிய சேவையின் மூலம், நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.20) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிறுவனத்துக்காக நிலஎடுப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்டப் பணி மேற்கொண்டு அம்மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, 7 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். மேலும், 14 கோடியே 86 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருவட்டார், கிள்ளியூர் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் தேனியில் கூட்டரங்கக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, இணையவழிச் சேவையின் மூலமாக நிலஅளவைக்கு (F-Line measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் தொடங்கி வைத்தார்.
வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிறுவனத்துக்காக நிலஎடுப்பு செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்டப் பணி மேற்கொண்டு அம்மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு பட்டாக்கள் வழங்குதல்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது அந்த நில எடுப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1959-ஆம் ஆண்டு விருத்தாசலம் வட்டம், விஜயமாநகரம் மற்றும் புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு மறுகுடியமர்த்தப்பட்ட கிராம நிலங்களில் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் 26.05.2022 அன்று அரசாணை வெளியிடப்பட்டு சுமார் 3,000 குடும்பங்கள் பயனடையும் வகையில் வருவாய் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி, விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நிலவரித் திட்ட அலகு ஏற்படுத்தப்பட்டு நிலவரித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்காக நிலஎடுப்பு செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விஜயமாநகரம் கிராமத்தில் 2676 நபர்களுக்கு 1371 பட்டாக்களும், புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 867 நபர்களுக்கு 475 பட்டாக்களும், என மொத்தம் 3,543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் 7 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கூட்டரங்கக் கட்டடத்தை திறந்து வைத்தல்: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் மற்றும் கிள்ளியூரில் 7 கோடியே 50 லட்சத்து 94 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3 கோடியே 75 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூட்டரங்கக் கட்டடம், என மொத்தம் 14 கோடியே 86 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை கட்டடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இணையவழி மூலமாக நிலஅளவைக்கு (F-Line measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைத்தல்: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நிலஅளவை செய்ய விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை/வரைபடம்’ ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், நில நிர்வாக ஆணையர் சு. நாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வே.ராஜாராமன், நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT