Published : 20 Nov 2023 01:23 PM
Last Updated : 20 Nov 2023 01:23 PM
சென்னை: "தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருக்கிறது. இதுகுறித்து அவர் சிகிச்சைப் பெற்று வரும் தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். ஐசியுவில் இருக்கிறாரே தவிர, அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நானும் அந்த மருத்துவ நிர்வாகத்தோடு பேசினேன்.
விஜயகாந்தின் உடல்நலம் சீராக இருக்கிறது. இன்று காலையிலும் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். ஐசியுவில் இருக்கிறாரே தவிர, அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது. ஏற்கெனவே, அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அதுதொடர்புடைய மருத்துவரே, தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள இருமல் தொடர்பான பிரச்சினைக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற நிலையில், அந்த தனியார் மருத்துவமனையில் அவரை மிகச் சிறப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, தேமுதிக தரப்பில் இன்று (நவ.20) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தேமுதிக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவ.18 ஆம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT