Published : 20 Nov 2023 10:59 AM
Last Updated : 20 Nov 2023 10:59 AM

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் ஓய்வில்லா மழையால் ஓய்வெடுத்த மக்கள்

படங்கள்: மு.லெட்சுமி அருண், என்.ராஜேஷ்

திருநெல்வேலி / தென்காசி / தூத்துக்குடி / நாகர்கோவில்: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து சில இடங்களில் பலத்த மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. திசையன் விளையில் கனமழையால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று காலை வரையான 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறில் 12 மிமீ, நாலுமுக்கு பகுதியில் 10 மிமீ, பாப நாசம், பாளையங் கோட்டையில் தலா 9 மிமீ, காக்காச்சி பகுதியில் 8 மிமீ, மாஞ்சோலையில் 6 மிமீ, ஊத்து, திருநெல்வேலியில் தலா 5 மிமீ, நாங்குநேரியில் 3.80 மிமீ, அம்பாசமுத்திரத்தில் 2 மிமீ, மணிமுத்தாறில் 1 மிமீ மழை பதிவானது.

தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணையில் 9 மிமீ, கருப்பாநதி அணையில் 5 மிமீ, குண்டாறு அணையில் 4.20 மிமீ, ஆய்க்குடியில் 2 மிமீ, செங்கோட்டை, சிவகிரியில் தலா 1 மிமீ மழை பதிவானது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

திற்பரப்பில் வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்து பரவலாக மழை பெய்தது. களியலில் அதிகபட்சமாக 60 மிமீ மழை பதிவானது. கனமழையால் திற்பரப்பு அருவியில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கல்மண்டப பகுதி தண்ணீரால் சூழப்பட்டது. அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சிற்றாறு அணையில் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் நேற்று 44.05 அடியாக இருந்தது. அணைக்கு 801 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.81 அடியாக இருந்தது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாக இருந்தது. விடுமுறை தினமான நேற்று கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள், மழையால் விடுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

விவசாய பணி தீவிரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை தொடர் மழை பெய்தது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடியில் டபிள்யு சாலை, பாளையங்கோட்டை சாலை, பி.எம்.டி. காலனி, கதிர்வேல் நகர், கோக்கூர் பகுதி என, பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் மழை நீர் வழிந்தோட ஏற்பாடுகளைச் செய்தனர்.

பல இடங்களில் டேங்கர் லாரி மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்தனர். கோவில்பட்டி நகரில் மழை விட்டுவிட்டு பெய்தபடி இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மானாவாரி விவசாயிகள் சாகுபடி பணிகளை மும்முரமாக செய்து வருகின்றனர். மாவட்டத்தின் தெற்கு பகுதியில் விவசாயிகள் நெல் நாற்றங்கால் தயார் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூரில் அதிகம்: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரையான 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 8.30 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டம் 6, திருச்செந்தூர் 33, காயல்பட்டினம் 33, குலசேகரன்பட்டினம் 15, சாத்தான்குளம் 20.80, கோவில்பட்டி 2, கழுகுமலை 5, கயத்தாறு 11, கடம்பூர் 9, மணியாச்சி 3, வேடநத்தம் 5, கீழஅரசடியில் 2 மிமீ மழையும் பெய்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி புதுக்குடி தென்கால் வாய்க்கால் பாலத்தில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, பாலம் சேதமடைந்தது. தென் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் விடுமுறை தினமான நேற்று மக்கள் வீட்டில் முடங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x