Published : 20 Nov 2023 06:39 AM
Last Updated : 20 Nov 2023 06:39 AM
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட நிபுணர்களை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ரவி மீது குற்றம்சாட்டி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலையில் கடிதம் எழுதினார். ‘சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் ஏற்படுத்துகிறார். எனவே, பதவியில் இருந்து நீக்கப்பட தகுதியானவர்’ என்று அதில் முதல்வர் தெரிவித்திருந்தார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 10-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ‘மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், முடிவை நிறுத்தி வைக்கலாம், திருத்தம் கோரி அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பலாம். எதுவுமே செய்யாமல் கிடப்பில் போட முடியாது’ என தெரிவித்து, விசாரணையை நவ.20-க்கு (இன்று) தள்ளிவைத்தது.
இந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடந்த 13-ம் தேதி திருப்பி அனுப்பினார். கடந்த 18-ம் தேதி நடந்த சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் அந்த 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக அன்று மாலையே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட நிபுணர்களை அவர் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்று டெல்லியில் இருந்து அவர் சென்னை திரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT