Published : 20 Nov 2023 05:30 AM
Last Updated : 20 Nov 2023 05:30 AM

பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து தெருமுனை பிரச்சாரங்கள் செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தல்

சென்னை: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் இலக்கிய அணி தெருமுனை பிரச்சாரங்கள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106-வது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி பங்கேற்று, இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து, இலக்கிய அணி சார்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டில், நலிவடைந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு கே.எஸ்.அழகிரி நிதியுதவிகளை வழங்கினார். பின்னர் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

இலக்கிய அணிகள்தான் ஒரு அரசியல் கட்சியின் தலையாய தூண்கள். கட்சியின் நிலை என்னவோ அதை காங்கிரஸ் இலக்கிய அணி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து இலக்கிய அணி தெருமுனை பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். நான் எந்த பின்புலமும் இன்றி, பேச்சாளராகத்தான் கட்சியில் அறிமுகம் ஆனேன். இந்திரா காந்தி தனியாரிடம் இருந்த வங்கிகளை தேசியமயமாக்கி புரட்சி செய்தார். அதை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்றோம். பேரணி நடத்தினோம். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், பொன். கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, விஜய் வசந்த் எம்.பி. எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார், இலக்கிய அணித் தலைவர் பி.எஸ்.புத்தன், துணை தலைவர்கள் ஆலடி சங்கரய்யா, சிங்கை தருமன், பொன் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x