Published : 20 Nov 2023 04:00 AM
Last Updated : 20 Nov 2023 04:00 AM
கோவை / பொள்ளாச்சி / திருப்பூர் / உடுமலை / உதகை: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது. கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரம் கொடி அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.சுருளிவேல் தலைமை வகித்தார். உமா தேவி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார்.
துடியலூர் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய அணிவகுப்பு சேரன் காலனி, விஸ்நாதபுரம் வழியாக பொருட்காட்சி மைதானத்தில் நிறைவடைந்தது. குழந்தைகள் உள்பட சீருடை அணிந்தபடி 700 பேர் பங்கேற்றனர். அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. ஸ்ரீ நவசக்தி மஹா வாராஹி அம்மன் ஆலயத்தின் ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். ஆர்எஸ்எஸ் தென் தமிழக இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேருந்து நிலையத்தில் நேற்று தொடங்கிய ஊர்வலம் குமரன் கட்டம், பேரூராட்சி அலுவலக வீதி வழியாக சென்று தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் கோட்டூர், ஆனைமலை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி கோட்டூர் நகரில் ஏடிஎஸ்பிகள் முத்துக்குமார், சுரேஷ்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து அணிவகுத்து வந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்களை பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். கோட்டூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தர்மாம்பிகை, ப்ராந்த் சேவா ப்ரமுக் (தென் தமிழ்நாடு) நிர்வாகி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் அவிநாசி திருப்புகளியூர் வாட்சர் மடாலய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் கலந்து கொண்டு அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஆலங்காட்டில் தொடங்கி கருவம்பாளையம் மேற்கு பிள்ளையார் கோயில், எருக்காடு வீதி, கேவிஆர் நகர், செல்லம் நகர் வழியாக சென்று தனியார் பள்ளியில் ஊர்வலம் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் தமிழக அமைப்பாளர் ஆறுமுகம் பேசினார். இதேபோல உடுமலை அடுத்த மடத்துக்குளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாராபுரம் கோட்ட நிர்வாகி சுந்தரராஜ் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் நடைபெற்ற ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டானிங்டன் பகுதியில் தொடங்கி காமராஜர் சதுக்கம், மார்க்கெட் சாலை, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக சென்று ராம்சந்த் சதுக்கத்தில் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலத்தையொட்டி, கோத்தகிரி நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT