Published : 20 Nov 2023 04:00 AM
Last Updated : 20 Nov 2023 04:00 AM

அனுமதியை மீறி இயக்கப்பட்ட கேரள ஆம்னி பேருந்து கோவையில் பறிமுதல்

படம் ஜெ.மனோகரன்

கோவை: அனுமதியை மீறி இயக்கப்பட்ட கேரள ஆம்னி பேருந்தை கோவையில் நேற்று போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் காலை கோவை நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தை வழியில் மறித்த கேரள போக்குவரத்து துறையினர் அனுமதியில் விதிமீறல் இருப்பதாக கூறி அபராதம் விதித்தனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நேற்று காலை அந்த பேருந்து கோவை காந்திபுரம் வந்தடைந்தது.

இந்த பேருந்து இயங்குவதில் விதிமீறல் இருப்பதாக கிடைத்த அடிப்படையில் ஆய்வு செய்த கோவை மேற்கு வட்டார போக்குவரத்து துறையினர், விதிமீறல் இருப்பதை உறுதி செய்து, பேருந்தை பறிமுதல் செய்து கோவை காந்திபுரம் பாலசுந்தரம் சாலையில் உள்ள கோவை மைய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர். அந்த பேருந்தில் பயணித்த பயணிகளில் சிலர் இறங்கி சென்றுவிட்டனர். சிலர், பேருந்தில் இருந்து இறங்க மறுத்து அந்த பேருந்திலேயே வந்தனர். தொடர்ந்து போக்குவரத்து துறையினருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நிலைமையை சமாளிக்க போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இது தொடர்பாக போக்குவரத்து துறையினர் கூறும்போது, “ஆல் இந்தியா பர்மிட் என பெற்றுக்கொண்டு இந்த பேருந்தை பத்தனம்திட்டா - கோவை இடையே இயக்கி வருகின்றனர். ஆல் இந்தியா பர்மிட் நிபந்தனையின்படி, ஒரு இடத்தில் ஆட்களை ஏற்றி சுற்றுலா அழைத்துச் சென்று, மீண்டும் அவர்கள் ஏறிய இடத்திலேயே இறக்கிவிடலாம். ஆனால், இவர்கள் தினசரி சேவையாக இந்த பேருந்தை குறிப்பிட்ட வழித் தடத்தில் இயக்கி வருகின்றனர்.

இதன் மூலம் கேரள, தமிழக அரசுப் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து புகார் பெறப்பட்டதன் அடிப்படையில், ஆய்வு செய்து அனுமதி மீறியது கண்டறியப்பட்டு, மோட்டார் வாகன சட்டப்பிரிவு 207-ன் படி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அபராதம் செலுத்திய பின்னர் பேருந்து விடுவிக்கப்படும். அந்த அபராதத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் ( ஆர்டிஓ ) முடிவு செய்வார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x