Published : 19 Nov 2023 07:02 PM
Last Updated : 19 Nov 2023 07:02 PM
சென்னை: "தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது ஒரு தற்காலிக சமாதான உடன்படிக்கைதான். இது விவசாயிகளையும் தமிழக மக்களையும் ஏமாற்றும் செயலாகும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு சிப்காட் என்கிற பெயரில் விளைநிலங்களை அபகரிப்பதற்கு தமிழக அரசு சட்டத்துக்கு புறம்பாக முயற்சித்து வருகிறது. தமிழக அரசு 161 நாட்கள் அமைதியான வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், முன்னணி நிர்வாகிகளையும் கடந்த 4-ம் தேதி கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்துள்ளது. திடீரென நேற்று ஏழு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வந்திருக்கிற செய்தி முதல்வருக்கு தெரிந்து நடைபெற்றிருக்கிறதா?. இல்லை முதல்வர் அனுமதி பெறாமல் நடைபெற்றதா? இல்லை அமைச்சர் எ.வ வேலுவின் அழுத்தத்தின் பெயரில் நடைபெற்றதா?
விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் மீது வன்முறையை ஏவி காவல்துறை வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் வரை திமுக அரசு செயலாற்றியது. தற்பொழுது திமுக தவிர தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளும் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குக்காக வன்முறையை ஏவியதற்காக, காவல்துறை தடியடி நடத்தியதற்காக, போராடிய விவசாயிகளை விரட்டியதற்காக, தமாகா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் பெரும் எதிர்ப்பினால் விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெற வேண்டுமென நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்த உள்ளதாக ரகசிய போலீஸார் மூலம் அறிந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது ஒரு தற்காலிக சமாதான உடன்படிக்கையை ஏற்பாடு செய்துள்ளார். இது விவசாயிகளையும் தமிழக மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.
இதன் உள்நோக்கத்தை பார்க்கும் போது கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்சாலை விரிவாக்கம், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வேலை வாய்ப்பிற்காக சாலைகள் மேம்பாலங்கள் விரிவாகவும், விரைவாகவும் போடப்பட்டது. அப்போது விவசாய விளைநிலங்கள் மேற்கண்ட பணிகளுக்காக பறிக்கப்படுவதாக திமுக ஓலமிட்டது. இதனால் மத்திய அரசும் இந்த திட்டத்தை கைவிட்டது. தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் ஏற்கெனவே எட்டு வழி சாலைக்காக தங்கள் நிலம் பாதிக்கப்படக்கூடாது என போராட்டம் நடத்தியவர்கள்.
அதே வேளையில் சிப்காட் தொழிற்சாலை விரிவாக்கத்திற்காகவும் நிலம் எடுக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள். தற்பொழுது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அருள் தலைமையிலான உழவர் உழைப்பாளர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்ததால் திமுக குறிப்பாக அந்த பகுதி அமைச்சர் இந்த போராட்டத்தை ஆதரித்து வந்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது சிப்காட் விவகாரத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் ரத்து செய்து இருப்பது உள்நோக்கம் கொண்டது.
ஏற்கெனவே எட்டு வழி சாலை, சிப்காட் நிறுவனம் செல்லும் சாலை அனைத்தையும் சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்துள்ளார் அந்தப் பகுதி அமைச்சர். சிப்காட் தொழிற்பேட்டை பயன்பாட்டுக்கு வரும்போது அந்த பகுதி அமைச்சர் அவர்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்களுக்கு தொழிற்பேட்டை ஓரத்தில் அமைந்துள்ள நிலம் என்ற மதிப்பு உயரும். பல ஆயிரம் கோடி ரூபாய் தனது சொத்தின் மதிப்பை உயர்த்தி கொள்வதற்காகவே சுயநலம் கருதி அந்த பகுதி அமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளார்கள். நில ஆக்கிரமிப்புச் சட்டத்தில் எந்த நிலம் எதற்காக எடுக்கப்பட்டது அதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றால் அந்த நிலத்தை எடுத்த விவசாயிகளிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டைக்காக 2000 ஏக்கரில் நிலத்தை கையகப்படுத்தி அதில் 750 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தியுள்ளது. மீதமுள்ள 1250 ஏக்கர் அளவிலான நிலம் காலியாக உள்ளது. அந்த நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பிக் கொடுப்பதா? அல்லது அந்த பகுதி அமைச்சரே எடுத்துக் கொள்வார்களா? என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்.
சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக கைது என்பதெல்லாம் ஒரு நாடகம் இதை வைத்து எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தவே அரசு முன்னெச்சரிக்கையின் பேரில் இவர்களை கைது செய்து உள்ளது. இதனால் ஒரு பெரிய போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்து விடக் கூடாது என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளை ஒடுக்க பார்க்கிறது.
ஏற்கெனவே சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, கட்டுமானப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை உயர்த்தி தமிழக மக்களை வாழ முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்க வைத்துள்ளார்கள். தற்பொழுது விவசாயிகளையும் அந்த வகையில் ஒடுக்க பார்க்கிறது இந்த திமுக அரசு. உண்மையில் விவசாயிகள் மீது ஆளும் திமுக அரசுக்கு அக்கறை இருக்குமானால் விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என தமாகா இளைஞரணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT