Published : 19 Nov 2023 05:47 PM
Last Updated : 19 Nov 2023 05:47 PM
சிவகாசி: சிவகாசி, ராஜபாளையத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு வெளியே பொருத்தப்பட்ட மீட்டர்கள் சேதமடைந்து உள்ளதால் சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
சிவகாசி மாநகராட்சியில் மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 34 லட்சம் லிட்டரும், வெம்பக்கோட்டை அணை மூலம் 21 லட்சம் லிட்டரும், நகராட்சியில் உள்ள 38,670 குடிநீர் இணைப்புகளுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் 28 லட்சம் லிட்டர் என நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் கிடைக்கிறது. இதன்மூலம் மாஜபாளையம் நகராட்சியில் முடங்கியாறு குடிநீர் மூலம் தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. இதன்மூலம் 28 ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கு ஒரு நபருக்கு தினசரி 61 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.170 கோடி மதிப்பிலும், ராஜபாளையம் நகராட்சிக்கு ரூ.197.79 கோடி மதிப்பிலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு, சிவகாசி, ராஜபாளையத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது.
மேல்நிலை தொட்டிகளில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் குழாய் பதிக்கப்பட்டு, குடிநீர் வழங்கும் அளவை கணக்கிடுவதற்காக மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த மீட்டர் பொருத்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பெரும்பாலான இடங்களில் மீட்டர் சேதமடைந்து விட்டது.
கடந்த மே மாதம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் சிவகாசிக்கு தினசரி 80 லட்சம் லிட்டரும், ராஜபாளையத்திற்கு 1.30 கோடி லீட்டரும் குடிநீர் கிடைத்து, ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும், வழக்கமான வழியிலேயே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பொருத்தப்பட்ட இணைப்புகள் வழியாக வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. தற்போது அனைத்து பகுதிகளிலும் சோதனை ஓட்டம் முடிந்து, வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் அளவிடுவதற்காக பொருத்தப்பட்ட மீட்டர் சேதமடைந்து உள்ளது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ''தாமிரபரணி கூட்டு குடிநீர் வந்த 6 மாதங்கள் ஆகியும், வழக்கமான முறையிலேயே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த முறையில் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதாலும், சட்ட விரோத குடிநீர் இணைப்புகளாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் குடிநீர் அளவீடு செய்யப்படுவதுடன், மோட்டார் வைத்து உறிஞ்சுவது தடுக்கப்படும். இந்த மீட்டரை வீடுகளுக்கு வெளியே பொருத்தியதால், பொரும்பாலான இடங்களில் மீட்டர்கள் சேதமடைந்து விட்டது. மேலும் பல இடங்களில் திருடு போயுள்ளது.
சோதனை ஓட்டம் முடிந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில், வீடுகளில் பொருத்தப்பட்ட மீட்டர்கள் சேதமடைந்துள்ளதால், சீரான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் வீடுகளுக்கு உள்ளேயே மீட்டர் பொருத்துவதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT