Published : 19 Nov 2023 01:52 PM
Last Updated : 19 Nov 2023 01:52 PM

சமவெளிப் பகுதிகளை காட்டிலும் நீலகிரியில் பால் உள்ளிட்ட ஆவின் பொருட்களுக்கு கூடுதல் விலை!

நீலகிரி மாவட்டத்தில் ரூ.27-க்கு விற்கப்படும் ஆவின் பால். (அடுத்த படம்)  கோவையில் ரூ.22-க்கு விற்கப்படும் பால் பாக்கெட்

உதகை: சமவெளிப் பகுதிகளை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் பால் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது குறித்து அமைச்சரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்துக்கு அரிசி முதல் காய்கறி வரை, சிமென்ட் முதல் செங்கல் வரை அனைத்து பொருட்களும் சமவெளிப் பகுதிகளிலிருந்து தான் கொண்டுவரப்படுகின்றன. இதனால், அப்பொருட்களின் விலை நீலகிரி மாவட்டத்தில் கூடுதலாகவே விற்பனை செய்யப் படுகின்றன. இந்நிலையில், இதில் அத்தியாவசிய பொருளான பாலும் இணைந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நீலகிரி மாவட்டத்தில், அனைத்து பொருட்களையும் கிடைக்கும் குறைந்த வருவாயில் வாங்கி வரும் மக்கள், தற்போது பாலுக்கும் கூடுதல் விலை கொடுக்க வேணடிய அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயத்துடன் இணைந்து உப தொழிலாக பால் உற்பத்தி சிறப்பாக விளங்கி வருகிறது. எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை, நுகர்வோருக்கு குறைந்த விலையில் தரமான பால் என்ற அடிப்படையில் பால் பொருட்கள் விற்பனையில், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரியில் விவசாயம்தான் பிரதான தொழில். விவசாயத்தை சார்ந்த கால்நடை வளர்ப்பில் பழங்குடியினர் ஈடுபடு கின்றனர். மேய்ச்சல் நிலங்கள் சுருங்கியதால் கால்நடை வளர்ப்பு பின்தங்கியுள்ளது. இதனால், மாவட்டத்தில் பால் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பால் தேவையை பூர்த்தி செய்ய கோவை, ஈரோடு மாவட்டங்களிலிருந்து ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்கிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக நுகர்வோருக்கு விற்கப்படும் பால் மற்றும் பால் பொருட்களின் விலை, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைவிட கூடுதலாக உள்ளது, நுகர்வோருக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ரூ.35-க்கு விற்கப்படும் ½ லிட்டர் தயிர், 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் ரூ.40-க்கு மேல் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.22.50-க்கு விற்கப்படும் பால், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ரூ.27-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பால் அத்தியாவசியப் பொருள் என்பதால், மக்கள் மீது கூடுதல் சுமை ஏற்றப்படுகிறது.

அமைச்சருக்கே ஆச்சர்யம்: ஆவின் நிறுவனத்தை ஆய்வு செய்ய வந்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம், நீலகிரி மாவட்டத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதை ஆச்சரியமாக கேட்ட அவர், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே விலையில்தான் விற்பனையாகிறது. இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றார். ஆனால், அதற்கு பின்னரும் விலை குறைக்கப்படவில்லை. அமைச்சரிடமே முறையிட்ட பின்னர், இனி யாரிடம் முறையிடுவது என தெரியவில்லை என மக்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வழக்கு தொடர முடிவு: மலை மாவட்ட நுகர்வோர் பாதிப்புக்குள்ளாகி வருவதால், பால் விலையை குறைக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீலகிரி நுகர்வோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சு.மனோகரன் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, ஆவின் நிறுவன பொது மேலாளரை தொடர்பு கொண்டு முறையிட்டோம். நீலகிரியில் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாலும், பிற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் பால் பொருட்களுக்கு போக்குவரத்து செலவு அதிகம் என்றும், அதனால் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். இதுதொடர்பாக அரசாணை எதுவும் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் அரசு நிர்ணயித்துள்ள விலையில் விற்கப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் அதற்கு கூடுதல் செலவாகிறது என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள நீலகிரி வாழ் மக்களை ஆவின் நிறுவனம் சுரண்டுகிறது. இது நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதி.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் பால் உள்ளிட்ட ஆவின் பொருட்கள், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுக்கு இணையான விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி முதல்வர், அமைச்சர்கள் உட்பட பலருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்" என்றார்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x