Published : 19 Nov 2023 04:31 AM
Last Updated : 19 Nov 2023 04:31 AM
சென்னை: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டங்கள் தொடர்பான 10 மசோதாக்களும் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல், பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது.
இதற்கிடையே, 10 மசோதாக்களை நிறுத்தி வைப்பதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 13-ம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில், அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் வகையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவது தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசியதாவது:
பதினைந்தாவது சட்டப்பேரவையில் ஆய்வு செய்து, நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள், 16-வது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நெடுநாட்கள் வைத்திருந்து, நவ.13-ம் தேதி எந்த காரணமும் குறிப்பிடாமல் ஏற்பிசை அளிப்பதை நிறுத்திவைப்பதாக மசோதாக்களில் குறிப்பிட்டு ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளார். காரணம் ஏதும் குறிப்பிடாமல் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல என்று இப்பேரவை கருதுகிறது.
அரசமைப்பு சட்டப்படி, இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஏற்பிசைவுக்காக முன்னிடப்படுமாயின், ஆளுநர் அதற்கு இசைவு அளிக்க வேண்டும் என்பதை இந்த அவை கவனத்தில் கொள்கிறது. எனவே, 2020 ஜன.9-ல் நிறைவேற்றப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழக சட்ட மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மசோதா, 16-வது சட்டப்பேரவையில், 2022 ஏப்.25-ல்நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்ட மசோதா, மே 10-ம் தேதி நிறைவேற்றப்பட்ட அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகங்களின் திருத்தச்சட்ட மசோதாக்கள், அக்.19-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டம், இரண்டாம் திருத்த மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாக்கள், இந்த ஆண்டு ஏப்.21-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் திருத்தச்சட்டம் ஆகிய மசோதாக்களை சட்டப்பேரவை விதி 143-ன் கீழ் பேரவை மறுஆய்வு செய்ய இந்த பேரவை தீர்மானிக்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதைத்தொடர்ந்து, தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை கட்சித் தலைவர்களை பேச பேரவைத் தலைவர் அப்பாவு அழைத்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் பேசியதாவது:
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். மாநில அரசுடன் மோதல் போக்கை கடை பிடிக்கிறார். ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும்.
வி.பி.நாகைமாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): முதல்வரின் தீர்மானத்தை ஆதரிக்கிறேன். மக்களின் மனசாட்சிப்படி தமிழக அரசு செயல்படுகிறது. ஆளுநருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை.
சிந்தனைச்செல்வன் (விசிக): மாநில அரசுதான் வேந்தர் என்ற பொறுப்பை ஆளுநருக்குத் தந்துள்ளது. அரசமைப்பு சட்டம் தரவில்லை. எனவே, எந்த பல்கலைக்கழகத்திலும் வேந்தராக ஆளுநர் இருக்கக் கூடாது என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
நயினார் நாகேந்திரன் (பாஜக): ஆளுநர் மீது அரசு கூர்மையான போக்கைக் கடைபிடிப்பது தேவையா என்பது என் வேண்டுகோள். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கடந்த 1998-ல் பல்கலைக்கழக வேந்தர்களாக ஆளுநர்களே இருக்கலாம் என அப்போதைய திமுக ஆட்சியில் தீர்மானம் போட்டுவிட்டு, இப்போது வேந்தராக முதல்வர் இருக்க வேண்டும் என்று தீர்மானம் போடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘‘அப்போது துணைவேந்தர்கள் அரசின் பரிசீலனைக்கு கொண்டுவந்து கலந்துபேசி நியமிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல. அதனால்தான் எதிர்க்கிறோம்’’ என்றார்.
பாஜக வெளிநடப்பு: தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, சட்ட அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, க.பொன்முடி ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், முதல்வர் தீர்மானத்தை ஏற்காமல் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஜி.கே.மணி (பாமக): தமிழக ஆளுநர் இந்தியாவின் வேறு எந்த ஆளுநரும் செய்யாத செயலைச் செய்துள்ளார். ஆளுநர், அரசுக்கும், முதல்வருக்கும் இணக்கமாக இருக்க வேண்டும்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஆளுநர், மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். திராவிட மாடல் குறித்து அது காலாவதியானது என்று தெரிவிக்கிறார். அவர் மசோதாக்களை திருப்பியனுப்பி தமிழக மக்களை அவமானப்படுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகத் தான் கூறியுள்ளார். ரத்து செய்வதாகக் கூறவில்லை.
அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகியோர் குறுக்கிட்டு விளக்கம் அளித்தனர்.
அதிமுக வெளிநடப்பு: இறுதியாக, மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்டிருந்ததை நீக்கும் சட்ட மசோதா கொண்டுவந்திருப்பதாக குறிப்பிட்டு, அதிமுக வெளிநடப்பு செய்தது.
இதேபோன்று, தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக) உள்ளிட்டோரும் பேசினர். இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும், வேந்தராக முதல்வர் செயல்பட வழிவகுக்கும், 10 மசோதாக்களும் ஒன்றன்பின் ஒன்றாக மறுஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பேரவை மீண்டும் கூடும்தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மசோதாக்கள் உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையே அனுப்பி வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT