Published : 18 Nov 2023 07:45 PM
Last Updated : 18 Nov 2023 07:45 PM

“ஆடை வடிவமைப்பாளர்களே கலாச்சாரத் தூதர்கள்” - ஆளுநர் இல.கணேசன் பேச்சு

சென்னை: ஆடை வடிவமைப்பாளர்கள் கலாச்சாரத் தூதர்களாகவும், புதுமைகளை உருவாக்குபவர்களாகவும் திகழ்கிறார்கள் என தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட்-டின் (NIFT) பட்டமளிப்பு விழா இன்று (18-11-2023) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி இல. கணேசன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில் நுட்ப நிறுவனம் 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் இந்த நிறுவனம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 18 ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவன வளாகங்களில் சென்னையும் ஒன்று. இது மிகச் சிறப்பாக செயல்பட்டு, முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிறுவனம் ஆடை வடிவமைப்பு, கைத்தறி மற்றும் கைவினை உற்பத்திப் பொருட்கள் மேம்பாட்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சிறந்த சேவை வழங்கும அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆடை அலங்காரம் தொடர்பான சமூகத்தின் தேவைகளுக்கு இந்த நிறுவனம் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில் நுட்ப நிறுவனம், சுற்றுச்சூழல் நிலைத் தன்மையிலும் சிறந்த பங்களிப்பை வழங்குகிறது. பசுமை வளாகம், குப்பைகள் அற்ற பகுதி, நீர் மறுசுழற்சி, மின் சிக்கனம் போன்றவற்றில் இந்த நிறுவனம் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. இது இந்த நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு உணர்வை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

நமது பாரம்பரியமான காதி மற்றும் கைத்தறி உற்பத்திப் பொருட்களை இந்த நிறுவனம் ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது. இது தேசத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் போற்றும் செயல். பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச திட்டங்களின் மூலம் சென்னையில் உள்ள நிஃப்ட் நிறுவனம், ஆடை வடிவமைப்புத் துறை, அரசு இயந்திரம் மற்றும் கைவினைக் கலைகள் துறைக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. நிதி ரீதியாக தற்சார்புடைய நிறுவனமாகவும் இது திகழ்கிறது.

புதிய தொழில்நுட்பங்களை ஏற்று சிறந்த கல்வித் திட்டத்தை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. மாணவர்களின் திறன்களை அனைத்து வகைகளிலும் மேம்படுத்துவதில் இந்நிறுவனம் சிறப்பாகப் பணியாற்றுகிறது. ஆடை வடிவமைப்புத் தொழில் துறை மிகச் சிறந்த தாக்கங்களை ஏற்படுத்தும் சக்தி படைத்தது.

ஆடை வடிவமைப்பாளர்கள் வெறும் வடிவமைப்பாளர்கள் மட்டுமே அல்ல. புதுமைகளின் முன்னோடிகளாகவும், கலாச்சாரத் தூதர்களாகவும், புதிய போக்குகளை உருவாக்குபவர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர். இன்று பட்டம் பெறும் மாணவிகளுக்கு வாழ்த்துகள். ஆடை வடிவமைப்புத் துறையில் உலகளாவிய நிலையில் செயல்படும்போது நமது நாட்டின் பரந்த மற்றும் பன்முகத் தன்மையுடன் கூடிய கலாச்சாரத்தையும் நிலைநிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மனோகர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x