Published : 18 Nov 2023 05:12 PM
Last Updated : 18 Nov 2023 05:12 PM
சென்னை: தமிழக ஆளுநர் திருப்பி அப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) கூட்டப்பட்டு முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதங்கள், காற்றில் பறந்த கலாய்ப்புகள், ஆவேசப் பேச்சுகள் என நிறைந்திருந்த சூழலில், அவைக்கு காவி வேட்டியில் வந்து கவனம் ஈர்த்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்துவது தொடர்பாக வழக்கும் நடந்து வருவதால் அவர் சர்ச்சைகளைத் தவிர்க்க காவி வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கும், கண்டிப்பும், ஆளுநரின் அதிரடியும்.. - தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று தெரிவி்த்தது. எதுவும் செய்யாமல் கோப்புகளைக் கிடப்பில் போட முடியாது என்றும் கருத்து தெரிவித்தது.
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாஉள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (நவ.18) கூட்டப்பட்டு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இரங்கல் தீர்மானங்கள்: இன்று (சனிக்கிழமை) காலை அவை கூடியவுடன், மறைந்த மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான என்.சங்கரய்யாவின் மறைவுக்கும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் வேணு, வெங்கடசாமி ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்த பின்னர், அவை உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்துமாறு கோரினார். அதன்படி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவை நடவடிக்கைகள் தொடங்கின.
ஆளுநர் பதவியின் மூலம் அரசியல்: அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு. இதனை அரசியல் ரீதியாக சகித்து கொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் - அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியதுதான் மரபு ஆகும்.
பாஜக ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். இப்போது உச்ச நீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்தவுடன் அவசர அவரமாக கோப்புகளைத் திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகம் ஆடுகின்றார் ஆளுநர். அவருக்கு தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இன்படி அவர் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ள 10 சட்டமுன்வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன். தமிழினத் தலைவர் கருணாநிதி சொல்லியபடி, மக்களுக்கும் மனசாட்சிக்கும் மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதையும் பதிவு செய்து, பின்வரும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்" என்றார்.
"பெரியார், அண்ணா என்றாலே அவருக்குக் கசக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தவுடன் முதலில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் தலைவர் எஸ்.வேல்முருகன், "சட்டத்துக்கு உடனடியாக கையெழுத்திடத்தான் ஆளுநர் இருக்கிறார். ஆனால், அவற்றை செய்ய அவர் தவறும்போது, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் இன்று சட்டப்பேரவை கூடியுள்ளது. முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். ஆளுநர் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே அவரது நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டங்களை தூக்கி வீசிவிட்டு அமைதி காக்கிறார் ஆளுநர். பெரியார், அண்ணா என்றாலே ஆளுநருக்கு கசக்கிறது, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.
'சர்வாதிகாரி ஆளுநர்' - மமக: முதல்வரின் தீர்மானத்தின் மீது பேசிய மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, "சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு முடிவெடுத்து அதற்கான ஒப்புதல் கோரிய நிலையில், அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்க கடைசி வரை ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் ரவி பிடிவாதம் பிடித்தார். அது சர்வாதிகாரப் போக்கே தவிர வேறு ஒன்றுமில்லை. ஆளுநரானவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படித்தான் செயல்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால் அதையும் மதிக்காமல் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் இருப்பவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி, "ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை" என்பதை நோக்கிச் செல்லும் போதுதான் மத்திய அரசாங்கத்தினுடைய பிரதிநிதியாக இங்கே வரக்கூடிய அந்த சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என்றார்.
ஆளுநர் தேவைதானா? - தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர் ஜிகே மணி, "ஆளுநரின் செயல்பாடு தமிழகத்தின் உரிமையை மதிக்காத வகையில் உள்ளது. மாநிலத்துக்கு விரோதமான ஆளுநரின் போக்கு கவலை அளிக்கிறது. சட்டப்பேவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுகிற ஆளுநர் தேவையா? அரசை மதிக்காத ஆளுநரின் போக்கு ஏற்புடையதல்ல" என்றார்.
பாஜக வெளிநடப்பு: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் பேசும்போது, "சட்டமன்றம் மிகப் பெரிய மாண்பும், மரபும் மிக்கது. இதனை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது. கருத்து வேறுபாடு பல இருக்கலாம். வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநர்களுக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்று, இதே சபையில் கலைஞர் கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், இன்று, தீர்மானம் வேறுவிதமாக இருக்கிறது. இது சட்டமன்றத்துக்கு முரண்பாடாக இருப்பதாக நான் கருதுகிறேன். துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்று அரசியல் சாசனமே சொல்கிறது" என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ”அப்போதெல்லாம் ஆளுநர் அரசுடன் பேசிதான், துணைவேந்தர்களை நியமிப்பார். ஆனால் இப்போது அப்படியல்ல. அதனால்தான் இதை தற்போது கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.அதன் பிறகு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனி தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கவனம் ஈர்த்த செல்வப் பெருந்தகை: சட்டப்பேரவையில் பேசும்போதெல்லாம் ஏதேனும் உவமையால் கவனம் ஈர்ப்பவர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை. இந்நிலையில் இன்று அவையில் அவர் பேசுகையில், "இந்த நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். அதற்காக அவருக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அப்படிப்பபட்ட தீர்மானத்தை கொண்டு வந்த சூரரை போற்றுகிறோம். ஒரு ஆளுநர் எதையும் பொருட்படுத்தாமல் ஏதோ முடியாட்சி நடப்பதைப் போல தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். அவர் விளையாடட்டும்.. நாளை நமது இந்திய அணி வெற்றி பெறுவதைப் போல நமது முதல்வர் வெற்றி பெறப் போகிறார்" என்று பேசினார்.
துரைமுருகன் பேச்சை ரசித்து ஆர்ப்பரித்த திமுகவினர்: சட்டப்பேரவையில் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது மசோதாக்களை திருப்பி அனுப்பி விட்டேன். என்னிடம் நிலுவையில் இல்லை என ஆளுநர் கூறுவார். அதனால்தான், இன்றே இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். நாளை மசோதா அவரிடம் இருக்கும். மசோதாவுக்கு அவர் கட்டாயம் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். ஆக இப்போது ஆளுநர் வலையில் மாட்டிவிட்டார். அதற்கு கையெழுத்து போட்டுவிட்டு தான் அவர் டெல்லிக்கு போக வேண்டும்" என்றார். துரைமுருகனின் பேச்சைக் கேட்டு திமுகவினர் மேசையைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சும் காரசார விவாதமும்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில். "ஆளுநர் இந்த 10 சட்ட மசோதாகக்ளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன். ஆளுநர் மசோதாக்களை WithHold செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதாவது, நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார். நிராகரிக்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லை. இதன் மூலம் மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகத்தான் பொருள்படுகிறது. எனவே, மசோதாக்களை மறு ஆய்வு செய்வதில் சட்டச் சிக்கல் இருக்கிறதா என்பதை தமிழக அரசுதான் ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
இவ்வாறாக எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் காரசார விவாதம் நடத்திய பின்னர், முதலமைச்சரின் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 10 மசோதாக்கள் மீது சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு நடத்திய சபாநாயகர், அனைத்து மசோதாக்களும் நிறைவேறியதாக அறிவித்தார். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...