Published : 18 Nov 2023 03:41 PM
Last Updated : 18 Nov 2023 03:41 PM
சென்னை: ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் பொருட்டு தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) கூடியதையடுத்து பேரவையில் முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”ஆளுநர் இந்த 10 சட்ட மசோதாக்களையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன்" என்று தெரிவித்தார். இதற்கு அமைச்சர்கள் எதிர்வினையாற்றினர்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில். "ஆளுநர் இந்த 10 சட்ட மசோதாகக்ளையும் நிராகரிக்கவில்லை, நிறுத்தி வைத்துள்ளதாகவே நான் கருதுகிறேன். ஆளுநர் மசோதாக்களை WithHold செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதாவது, நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார். நிராகரிக்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லை. இதன் மூலம் மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகத்தான் பொருள்படுகிறது. எனவே, மசோதாக்களை மறு ஆய்வு செய்வதில் சட்டச் சிக்கல் இருக்கிறதா என்பதை தமிழக அரசுதான் ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்த தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி “ஆளுநர் நிலுவையில் வைக்கவில்லை. திருப்பி அனுப்பி வைத்துள்ளார். ஏதோ ஒரு சட்ட மசோதாவில் அளித்த ஆலோசனையின் பேரில் கெட்டிக்காரத்தனமாக செயல்படுவதைப் போல ஆளுநர் நினைத்துக் கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு “ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அனுப்பி வைக்கும்போது, With Hold என்று சொல்வது நிராகரிப்பதாகவே பொருள்” என்று விளக்கினார்.
அதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “மசோதாக்களை ஆளுநர் WithHold செய்கிறார் என்றால், அதை ஒப்புதல் அளிக்காமல் நிராகரிக்கிறார் என்றே பொருள். மசோதாக்களை மறு ஆய்வு செய்வதற்கான அனுமதி அளிக்க சபாநாயகர் என்ற அடிப்படையில் எனக்கு அதிகாரம் இருக்கிறது. எந்தவித மாற்றங்களும் இல்லாமல் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்படும். ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அமைச்சர் சொல்ல வேண்டிய கருத்துகளை எல்லாம் சபாநாயகர் நீங்களே தெரிவித்து விடுகிறீர்கள். அனைத்து இலாகாக்களையும் நீங்களே வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அமைச்சருக்கு என்றும் தனியாக இலாகா உள்ளது. ஆனால், எதைப் பேசினாலும் ஒரு சிலரே எழுந்து பேசுகிறார்கள். அவர்களின் இலாகா வரும்போது பேசினால் சரி” என்றார்.
மேலும் பேசிய இபிஎஸ், ”உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விட்டது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஏன் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்? அந்த வழக்கிலேயே நல்ல தீர்ப்பு கிடைத்து விட்டால் இந்த சிறப்பு கூட்டம் கூட்டியதற்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும். ஏன் இந்த அவசரம். அனைத்து மசோதாக்களையும் சுட்டிக்காட்டி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதா? முதல்வரை வேந்தராக்கும் மசோதா அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது அதை திமுக எதிர்த்தது. யாருக்கும் வக்காலத்து வங்கி பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடா? அப்போதே துணை வேந்தர் நியமனம் குறித்து நாங்கள் கொண்டுவந்த தீர்மானத்தை நீங்கள் ஆதரித்திருக்கலாம். துணை வேந்தர்கள் நியமனம் என்பது எப்போதும் ஒரே மாதிரிதான் நடைபெறுகிறது” என்றார்.
இதுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அரசின் ஆலோசனையை ஆளுநர் ஏற்க மறுக்கிறார். முந்தைய காலங்களில் முதல்வர் உடன் கலந்து பேசிதான் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டார்கள்” என்று விளக்கமளித்தார். இவ்வாறாக, ஆளுநரின் செயல்பாடு, பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குறித்து காரசாரமாக விவாதம் நடந்த நிலையில், அதிமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீதான தமிழக அரசின் தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT