Published : 18 Nov 2023 02:50 PM
Last Updated : 18 Nov 2023 02:50 PM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் சுகாதார ஆய்வாளர்கள் சீருடை அணிவதை தவிர்த்து, அதற்கான சலுகைகளை மட்டும் பெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 38 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 19-பேர், (கிரேடு-1) கிரேடு-2வில் 7-பேர் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் மொத்தம் 51 பேர் பணியாற்றி வருகின்றர்.
இவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, மலேரியா உட்பட காய்ச்சல் தொடர்பாக பதிவாகும் விவரங்களை சேகரித்து அந்த பகுதியில் மற்றவர்களுக்கு காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கிராமங்களில் உள்ள வீடுகளில் கொசுக்கள் உற்பத்தி உள்ளதா?, முறையாக வீடுகளில் தூய்மைப் பணியாளர்கள் குளோரின் பணிகளை மேற்கொள்கிறார்களா?, குடி யிருப்பு பகுதிகளில் குடிநீரை சேகரித்து அவை குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா? என ஆய்வுக்கு அனுப்புவது மற்றும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதார ஆய்வாளர்கள் பல்வேறு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இதற்காக, அரசு இவர்களுக்கு சீருடை வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் காக்கி நிறத்தில் கால்சட்டையும், வெள்ளை நிற சட்டையும், அதில் பொது சுகாதாரத்துறையின் ‘லோகோ’வும் இடம் பெற்றிருக்கும். இந்த சீருடையை அணிந்து சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும்போது, அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கிறார்கள் என மக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். தற்போது, அரசு சார்பில் இவர்களுக்கு சீருடையும் மாற்றப்பட்டுள்ளது. கிரேடு- 1 நிலை அதிகாரிகளுக்கு நீல நிற சீருடையும், கிரேடு -2 அதிகாரிகளுக்கு சாம்பல் கலரில் சீருடையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சீருடைகளை அந்தந்த நிலை அதிகாரிகள் கட்டாயம் அணிந்து பணிக்கு வரவேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுசுகாதாரம் நோய் தடுப்பு மற்றும் மருந்து துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை அந்த உத்தரவுகளை பெரும்பாலான சுகாதார ஆய்வாளர்கள் பின்பற்றுவது இல்லையென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. திடீரென ஆய்வாளர்கள், வீடுகளில் ஆய்வுக்கு வருபவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவும் யோசிக்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-1,2) தினசரி மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். திடீரென ஒரு வீட்டுக்கு செல்லும்போது அவர்களுக்கு சீருடை இல்லாமல், சாதாரண உடைகளை அணிந்து செல்லும்போது, வீட்டில் உள்ளவர்களும் இவர்களை ஆய்வு மேற்கொள்ள தயங்குகிறார்கள். இந்த சீருடைக்காக அரசு இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2,400 மற்றும் ஒவ்வொரு மாதமும் ரூ.200 சலவைக்காக வழங்குகிறது. இதை பலர் வாங்கிக்கொண்டு சீருடை அணிய மறுக்கிறார்கள். இந்த பணத்தை பெற்றால் சீருடை அணிய வேண்டியிருக்கும் என பலரும், வாங்க மறுத்து வருகிறார்கள். சமீபத்தில் இந்த துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் சீருடை கட்டாயம் அணிந்து பணிக்கு வரவேண்டுமென அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
இதை கண்காணிக்க அந்தந்த மாவட் டத்தின் துணை இயக்குநர்களுக்கும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டிய அதிகாரிகள் அரசு உத்தரவை தவிர்த்தும், இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் இந்த உத்தரவை அலட்சியப்படுத்தியும் வருகிறார்கள். வரும் நாட்களில் சுகாதார ஆய்வாளர்கள் சீருடை அணிவதை உறுதி செய்யும் வகையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, "சுகாதார ஆய்வாளர்களுக்கு சீருடை அணிய உரிய ஆலோசனைகளும், வழிகாட்டு நெறிமுறை களும் வழங்கப்பட்டுள்ளன. இனி வரும் நாட்களில் சீருடை அணியாதவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...