Published : 18 Nov 2023 05:20 AM
Last Updated : 18 Nov 2023 05:20 AM
சென்னை: சொகுசு வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதித்தும், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு ஆயுள் வரி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும்போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களின் ஆயுள் வரியை 15, 20 ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒருமுறை செலுத்தினால் போதுமானது. அதுவே வணிகரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு காலாண்டு அல்லதுஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், அண்மையில் மோட்டார் வாகன வரிகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, ஒரே தவணையில் வரிகளை செலுத்தும் வகையில் மோட்டார் வாகன விதிகள் மாற்றியமைக்கப்பட்டன. சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படும் 12 இருக்கைகளுக்கு உட்பட்ட மேக்ஸி கேப் வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
அதன்படி, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்கு உட்பட்ட புதிய மேக்ஸி கேப் வாகனங்களுக்கு வாகன விலையில் 13 சதவீதமும், ஓராண்டு பழைய வாகனம் என்றால்11.75 சதவீதம் எனவும், 11 ஆண்டுகளுக்கு மேலான வாகனம் என்றால் 9 சதவீதம் என்ற வகையில் ஆயுள் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, வரியைச் செலுத்த அவகாசம் வேண்டும்என ஆணையரிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், ஆயுள் வரியை 4 தவணைகளாக செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த காலாண்டுக்கான வரிக்கு பதில் முதல் தவணையை வரும் 30-ம் தேதிக்குள்ளாக செலுத்த வேண்டும். நிலுவை வரி செலுத்தாமல் வாகனங்களை விற்கக் கூடாது என்பனஉள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை குறிப்பிட்ட சிலவாகனங்களை மட்டுமே வாடகைக்கு பயன்படுத்தும் வகையில் (மஞ்சள் போர்டு) பதிவு செய்யமுடியும். இனி சொகுசு வாகனங்கள்உட்பட அனைத்து வாகனங்களையும் வாடகை வாகனங்களாகப் பயன்படுத்தும் வகையில் பதிவு பணிகளை மேற்கொள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கையில், "போக்குவரத்து ஆணையரகம் அல்லது அரசின் அனுமதி பெறாமல் பதிவு பணிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொண்டு உரிமத்தைவழங்கலாம். மக்களிடையே சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது" என ஆணையர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT