Published : 18 Nov 2023 06:30 AM
Last Updated : 18 Nov 2023 06:30 AM

ஓர் அதிகாரிக்காக பயணிகள் அலைக்கழிப்பா? - தெற்கு ரயில்வே விளக்கம்

கோப்புப் படம்

சென்னை: அதிகாரி சென்ற ரயிலுக்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அலைக்கழிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில், பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக எழும்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் வழக்கமாக நிறுத்தப்படும். நேற்று முன்தினம் இரவு, ரயில்வே வாரிய உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர்,ராமேசுவரத்துக்கு ஆய்வுக்குசெல்லவிருந்த சிறப்புரயில் 4-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டதால், பாண்டியன் விரைவு ரயில் 5-வதுநடைமேடையில் நிறுத்தப்பட்டது. இதனால், அந்த ரயிலில் பயணம் செய்ய வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்குமங்குமாக அலைந்து படிக்கட்டில் ஏறிஅடுத்த நடைமேடைக்கு சென்றனர். குறிப்பாக, வயதானவர்கள், கைக் குழந்தையோடு வந்த தாய்மார்கள் எல்லாம் பரிதவித்தனர்.

இதுகுறித்து, மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில்,‘‘ரயில் நிலைய கட்டுமானப் பணி, தண்டவாள பழுது நீக்கும்பணி நடைபெறுகிறது என்றால் வேறு நடைமேடைக்கு ரயில்கள் மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரு அதிகாரிக்காக பாண்டியன் விரைவு வண்டியை அடுத்த நடைமேடையில் நிறுத்தி மக்களை அலைக்கழித்துள்ளனர். இதற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அளித்துள்ள விளக்கம்: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 9 நடைமேடைகள் உள்ளன. இதில், முதல் 3 நடைமேடைகள் குறைந்த நீளம் கொண்டவை. 4-வது நடைமேடை மட்டுமே நீளம் கொண்டது. அத்துடன், பீக் ஹவர் நேரங்களில் நீண்டதூர விரைவு ரயில்களை கையாள்வதற்கு 4-வது நடைமேடை வசதியாக உள்ளது. கடந்த 11-ம் தேதி சார்மினார், முத்துநகர் மற்றும் பொதிகை ஆகிய விரைவு ரயில்கள் மாலை 6 மணி முதல் இரவு 8.40 மணி வரை4-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டன. எழும்பூருக்கு மாலை 6.20 மணிக்கு வந்து சேரும் சோழன் விரைவு ரயில்தான் மீண்டும் பாண்டியன் விரைவு ரயிலாக இரவு 9.40 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படுகிறது. அன்றைய தினம் இந்த ரயில் 5-வது நடைமேடையில் வந்து நின்றது. பாண்டியன் விரைவு ரயில் பல நாட்கள் 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரிய உறுப்பினர் செய்வதற்கான சிறப்பு ஆய்வு ரயில், சென்னைசென்ட்ரலில் இருந்து 8.40மணிக்கு எழும்பூர் ரயில்நிலைய 4-வது நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பாண்டியன் விரைவு ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரமே இருந்தால் மீண்டும் நடைமேடை மாற்றி நிறுத்தினால் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கருதி 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க நிர்வாக காரணம்தான். ரயில் பயணிகளுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காக தெற்கு ரயில்வே கடமைப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தவும், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x