Last Updated : 17 Nov, 2023 07:55 PM

2  

Published : 17 Nov 2023 07:55 PM
Last Updated : 17 Nov 2023 07:55 PM

அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தற்காலிக ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஏ.கனகசுந்தர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் 500 தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஊதியத்தை விட குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர், தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் 1.4.2019 முதல் ஊதிய நிலுவை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிடுகையில், பொது வாகன போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை 31.12.2018-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை விட குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊதிய நிலுவை தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு போக்குவரத்து கழகத்தில் குறைந்தபட்ச ஊதிய சட்டம் அமல்படுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது. அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 31.12.2018-ல் அரசு பிறப்பித்துள்ள அரசாணை மற்றும் 18.3.2019-ல் ஏற்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் பெற தகுதியானவர்கள்.

அரசு தரப்பில் தற்காலிக பணியாளர்களுக்கு போனஸ், பேட்டா, உணவு சலுகை, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பள விகிதத்துக்குள் வராது. எனவே மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அனைத்து தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை மற்றும் 2019 உடன்படிக்கை அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் 1.4.2019 முதல் ஊதிய நிலுவை தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x