Published : 17 Nov 2023 04:18 PM
Last Updated : 17 Nov 2023 04:18 PM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் திமுக கோஷ்டி பூசல் மீண்டும் தலைகாட்டியிருக்கிறது. மத்திய மாவட்ட செயலாளர் டி.பி.எம். மைதீன்கானுக்கு எதிராக மாநகர வட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலியில் திமுகவையும் கோஷ்டி பூசலையும் பிரிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கட்சி தலைமை பலமுறை கண்டித்தும், அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், கோஷ்டிகளை நேரில் அழைத்து பேசியும் கோஷ்டி பூசலை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தை கவுன்சிலர்களின் முழு ஒத்துழைப்புடன் நடத்த முடியவில்லை. மக்கள் பிரச்சனைகளை பேசி தீர்ப்பதிலும் அக்கறை செலுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலராக இருந்த பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல்வகாபுக்கும், மாநகராட்சி மேயர் பி.எம். சரவணனுக்கும் இடையே நீடிக்கும் பனிப்போரால் மாநகராட்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக திமுகவினரே தெரிவிக்கிறார்கள். இந்த பனிப்போர் காரணமாக மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து அப்துல்வகாப் நீக்கப்பட்டு, மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். கட்சியில் நிலவும் மோதல்களை தற்காலிகமாக ஒத்திவைக்கும் நடவடிக்கையாக மைதீன்கானை கட்சி தலைமை நியமித்தது.
தலைமக்கு புகார் கடிதம்: தற்போது அவருக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருப்பது கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. டிபிஎம் மைதீன்கானுக்கு எதிராக திருநெல்வேலி மாநகர வட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் 31 பேர் கையெழுத்திட்டு கட்சி தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் விவரம்:மைதீன்கான் நியமிக்கப்பட்டதில் இருந்து கட்சி பணிகள் முறைப்படி நடைபெறவில்லை. நிர்வாக சீர்கேடுகள் இவரது நிர்வாகத்தில் அதிகமாக இருக்கிறது. நிர்வாகிகள் யாரையும் அவர் மதிப்பதில்லை. நிர்வாகிகளை நம்புவதுமில்லை. முறைப்படி எந்த தகவலையும் தெரிவிப்பதும் இல்லை.
நிர்வாகிகளிடையே பலகுளறுபடிகள் ஏற்பட்டு பல அணிகளாக திருநெல்வேலி மத்திய மாவட்டம் பிரிந்து இருக்கிறது. கட்சியின் விதிமுறைகளையும், வழிமுறைகளையும், நிர்வாகிகளை எப்படி அணுக வேண்டும், எவ்வாறு கட்சி பொறுப்பில் இருந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெரிவித்து அவரை முறையாக கட்சி அமைப்பை நடத்த வழி செய்யுங்கள். இது குறித்து தெரிவித்தால் சில வட்ட செயலர்களை மாற்ற முயற்சி எடுத்து வருகிறேன் என்று அவர் மிரட்டல் விடுக்கிறார். மாவட்ட பொறுப்பாளர் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளும் வரை செயல்வீரர்கள் கூட்டத்தை புறக்கணிப்போம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருக்கு எதிரான மனநிலையில் கட்சி நிர்வாகிகள் இருப்பதை போன்ற தவறான பிம்பத்தை கட்டமைப்பு செய்து, தலைமைக்கு உண்மைக்கு புறம்பான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுவதாக டிபிஎம் மைதீன்கான் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். திருநெல்வேலி திமுகவில் புகைந்து கொண்டிருக்குமு் கோஷ்டி பூசலை முற்றிலுமாக ஒழிப்பதற்கு கட்சி தலைமை என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT