Published : 17 Nov 2023 04:22 PM
Last Updated : 17 Nov 2023 04:22 PM
சென்னை: தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின் போது, 50 வயதுக்கு மேலான பெண்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சசிகலா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், நள்ளிரவு வரை இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்று, வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தல் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு போக்குவரத்து, உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், பல்வேறு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், "இந்திய அரசியல் சாசனம் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விதிகளை வகுத்திருக்கிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதில் இருந்து சில பிரிவினருக்கு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் தேர்தல் பணிக்கு அழைக்கக் கூடாது என கொள்கைகளும் உள்ளன" எனக் கூறி, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT