Published : 17 Nov 2023 10:59 AM
Last Updated : 17 Nov 2023 10:59 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா நகரிலிருந்து பேருந்து நிலையம் வரை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: திராவிட மாடல் அரசால் தமிழகம் வளர்ந்துள்ளதாக அக்கட்சியினர் கூறுவது முற்றிலும் பொய். பெரம்பலூர் மாவட்டம் இன்னும் பின்தங்கியே உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூரில் பொருளாதார மண்டலம் அமைக்க திமுக அரசு 3,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. ஆனால் இதுவரை அங்கு ஒரு செங்கல்லை கூட நடவில்லை. எனவே, இப்பகுதி வளர வேண்டும் எனில் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு உங்கள் ஆதரவை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, காமராஜர் வளைவு பகுதியில் நிறைவு செய்தார். அங்கு அவர் பேசியது: திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இங்குள்ள திமுகவினரில் கொள்ளையடிப் பதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி ஏலம் எடுக்கச் சென்ற பாஜக நிர்வாகிகளை தாக்கிய அமைச்சர் சிவசங்கர் ஆதரவாளர்களை பாஜக விடப்போவதில்லை.
உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். உங்கள் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர் பிரதமர் மோடி. 11-வது இடத்திலிருந்த நாட்டின் பொருளாதாரத்தை 5-வது இடத்துக்கு முன்னேற்றியவர் மோடி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கரத்தை வலுப்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, மாநில இணைப் பொருளாளர் சிவ சுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT