Published : 11 Jan 2018 09:13 AM
Last Updated : 11 Jan 2018 09:13 AM
திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி வீரன் (54). பெங்களூருவில் வேலை செய்து வந்த இவர், உடல் நிலை சரியில்லாததால் தனது நண்பர் ராதாகிருஷ்ணனுடன் நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து ஊருக்கு அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வரும்போது வீரன் உயிரிழந்தார்.
இதனையறிந்த நடத்துநர், சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீரனின் உடலுடன் ராதாகிருஷ்ணனை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். சடலத்துடன் என்ன செய்வது எனத் தெரியாமல் ராதாகிருஷ்ணன், கண்ணீருடன் உதவிக்காக காத்திருந்தார். அவ்வழியே சென்றவர்கள் சூளகிரி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். மேலும், வீரனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும்போது பேருந்தில் கூட்டம் இல்லாததால், வீரன் ஒரு சீட்டில் படுத்து உறங்கிக் கொண்டு வந்தார். ஓசூர் பேருந்து நிலையம் வந்தபோது, பயணிகள் கூட்டம் அதிகரித்தது. நீண்ட தூரம் கடந்த வந்த பிறகு உறங்கிக் கொண்டிருந்த வீரனை நடத்துநர் எழுப்பியபோது வீரன் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிந்தது.
இதையடுத்த சூளகிரி மேம்பாலத்துக்குக் கீழ் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டதுடன், பயணச்சீட்டையும் நடத்துநர் கேட்டார். நான் தர மறுத்தேன். அதற்கு நடத்துநர், ‘மனுஷனே டிக்கெட் வாங்கிட்டான், உனக்கு எதுக்கைய்யா டிக்கெட்?’ என கேலியாக பேசிவிட்டு பயணச் சீட்டை பறித்துச் சென்றுவிட்டார்’ என வேதனையுடன் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸார் தனியார் அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து மாலை 6.30 மணியளவில் வீரனின் உடலை திருகோவிலூருக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT