Published : 16 Nov 2023 11:54 PM
Last Updated : 16 Nov 2023 11:54 PM

கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று: சென்னை உயர்நீதிமன்றம்

கோப்புப்படம்

சென்னை: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்களுக்கு, அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களைப் பெற பயிற்சி மருத்துவர்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு "கோவிட் பணி" சான்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் 2022, அக்டோபர் 11-ல் அறிவிப்பாணை வெளியிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைகளில் கரோனா பணியாற்றிய மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதற்கு கோவிட் பணிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தாங்களும் கரோனா காலத்தில் பணியாற்றியவர்கள்தான், எனவே பாரபட்சமான இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தனியார் மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல கரோனா காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு கோவிட் பணிச் சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், "கரோனா காலகட்டத்தில் 84 சதவீத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற்றனர். தனியார் மருத்துவர்கள் கரோனா பணியாற்றினார்களா? என்பதை சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை. தனியார் மருத்துவர்களும் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை.

மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, 36 மாதங்கள் பணியாற்றிய காலத்தை பயிற்சி காலமாகத்தான் கருத முடியும். எனவே, அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க முடியாது" என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் மருத்துவர்கள் வழக்கைப் பொறுத்தவரை அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் முடிவில் தவறில்லை.

கரோனா காலத்தில் தனியார் மருத்துவர்களின் சேவையும் பாராட்டும் வகையில் இருந்தாலும், அவர்கள் கரோனா பணியாற்றினார்களா? என்பதை சரிபார்க்க நடைமுறை ஏதும் இல்லை, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனவே அரசின் முடிவு அரசியலமைப்பு விதிகளை மீறியது ஆகாது எனக்கூறி, தனியார் மருத்துவர்களின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதேநேரம், கரோனா காலத்தில், பயிற்சி மருத்துவர்களும் அரசு மருத்துவர்களுக்கு இணையாக பணியாற்றியுள்ளனர். தங்களது உயிரையே துச்சமாக மதித்து பணியாற்றிய அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற உரிமை உள்ளது. பயிற்சி மருத்துவர்கள் 10 நாட்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி கோவிட் பணி சான்றிதழ் கோரலாம். அடுத்த 5 நாட்களில் அந்த சான்றிதழை அவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x