Published : 16 Nov 2023 05:40 PM
Last Updated : 16 Nov 2023 05:40 PM

“செய்யாறு விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை... திமுக அரசின் கோழைத்தனம்!” - அண்ணாமலை சாடல்

சென்னை: "தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதுமே தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அமைதியாகப் போராடும் திருவண்ணாமலை விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, இதற்கு மேலும் திமுக அரசால் தரம் தாழ்ந்து போக முடியாது என்ற எங்கள் எண்ணத்தைத் தவறென நிரூபித்துள்ளனர்.

திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பாசிச திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழக பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, “செய்யாறு அருகே விளைநிலங்கள் கையப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது அலகு விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், கடந்த ஜுலை 2-ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

இந்நிலையில், 124-வது நாளான கடந்த 2-ம் தேதி, மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை செவிகொடுத்து கேட்காமல் செயல்படும் ஆட்சியர் பா.முருகேஷை கண்டித்து, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நியாய விலை கடை அட்டை ஆகியவற்றை செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகாவிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 125 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x