Published : 16 Nov 2023 03:29 PM
Last Updated : 16 Nov 2023 03:29 PM

“செய்யாறு விவசாயிகள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை... ஜனநாயகத்துக்கு முரணானது” - தினகரன்

செய்யாறு பகுதியில் 3-வது அலகு சிப்காட் அமைப்பதற்கு தமிழக அரசு விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்.

சென்னை: “செய்யாறு அருகே விளைநிலங்கள் கையப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. செய்யாறு நகரில் ஏற்கெனவே சிப்காட் தொழிற்பூங்காவின் இரண்டு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது.

நெல், கரும்பு, கேழ்வரகு, மற்றும் காய்கறிகள் என பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், எவ்வித கருத்தையும் கேட்காமல் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து அம்மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் நிலவுரிமையை மீட்க கடந்த 125 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் விவசாயிகளை சமூக விரோதிகள் போல சித்தரித்து அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்துக்கு முரணானது.

எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்'' என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x