Published : 16 Nov 2023 03:11 PM
Last Updated : 16 Nov 2023 03:11 PM
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் உடல் வியாழக்கிழமை தமிழக அரசு மரியாதையுடன் சென்னை - பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பொதுவுடைமை போராளியான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 102. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா, சென்னை குரோம்பேட்டை நியூகாலனி 5-வது பிரதான சாலையில் வசித்து வந்தார். சளி, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 13-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அவர் காலமானார்.
தகவல் அறிந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மருத்துவமனையில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு சங்கரய்யா உடல் எடுத்து செல்லப்பட்டது. பிற்பகலுக்கு பிறகு, சென்னை தியாகராயர் நகர் வைத்தியராம் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், தகைசால் தமிழர்,முதுபெரும் பொதுவுடைமை போராளி,விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா. விடுதலைப் போராட்ட வீரராக, சட்டப்பேரவை உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக தமிழகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டுகளை போற்றும் விதமாக, அவரது திருஉடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இறுதி ஊர்வலம்: தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சங்கரய்யாவின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழிநெடுகிலும், பொதுமக்கள், பாதசாரிகள் சங்கரய்யாவின் உடலுக்கு பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் கூட்டம்: பெசன்ட் நகர் மின் மயானத்தில், இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர்கள், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், திமுக எம்.பி. ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் சங்கரய்யாவின் இரங்கல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அரசு மரியாதையுடன் தகனம்: காவல்துறையினர் 3 சுற்றுகளில் 30 குண்டுகள் சுடப்பட்டு, அரசு மரியாதையுடன், பெசன்ட் நகர் மின் மயானத்தில் சங்கரய்யாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. | வாசிக்க > சொந்த வாழ்க்கையில் இறுதி வரை கம்யூனிஸ்ட் நெறிகளை கடைபிடித்த 'தகைசால் தமிழர்' சங்கரய்யா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT