Published : 16 Nov 2023 03:15 PM
Last Updated : 16 Nov 2023 03:15 PM
சென்னை: வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி இருப்பதால், சென்னையில் அவ்வப்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகள், தெருக்கள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் மழை நீரில் தான் பொதுமக்களும் நடந்து செல்கின்றனர். சில நேரங்களில், சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளங்கள் இருப்பதை அறியாமல், பள்ளத்தில் சிக்கி வாகனத்துடன் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற பெரும்பாலான விபத்துகளில் சிக்குவோர் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் தப்பி விடுகின்றனர். ஆனால், ஒரு சில விபத்துகள் எதிர்பாராத நேரங்களில் எப்போதாவது நிகழ்ந்தாலும், அது உயிர் சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுவிடுகிறது. அதாவது, மழை காலங்களில் மின் பெட்டிகளில் ஏற்படும் மின் கசிவு காரணமாக நிகழும் விபத்துக்கள்தான் அவை. மழைக் காலங்களில், நம் உடல் பெரும்பாலும் ஈரப்பதத்துடன் இருக்கிறது. இதனால் உடலில் மின்சாரம் இன்னும் வேகமாக பாய்வதற்கு காரணமாக அமைக்கிறது.
இதனால், மழை காலங்களில் மின்சாரத்தை கையாளும்போது, கவனமாக இருக்க வேண்டும் என பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான மின் பெட்டிகள் முறையாக பராமரிப்பு இன்றி, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது, மழைக்காலம் என்பதால், சாலை ஓரங்களில் ஒருசில இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் மின் பெட்டிகளில், மழை நீர் புகுந்து, நடந்து செல்லும் பாதசாரிகளின் உயிருக்கு உலை வைக்கும் அபாயகரமான நிலையில் இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி, பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில், இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். மேலும், 1,348 துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதாகவும், 53,852 பழுதடைந்த மின் கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். குறிப்பாக, சென்னையில் தரைமட்டத்தில் இருந்த 4,638 மின் பெட்டிகளின் உயரம் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், மின் பெட்டிகளின் உயரம் தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்டாலும், முறையாக மூடப்படாமல், திறந்த நிலையிலும் இருக்கும் மின் பெட்டிகளால் மழைக்காலங்களில் உயிருக்கு ஆபத்து நேரவாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் அயனாவரம், சூளைமேடு, புதுப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் மின் பெட்டிகள் இதுபோன்று ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த மேனகா ரமேஷ் கூறும்போது, ‘சாலைகளில் செல்லும்போது, பெரும்பாலான இடங்களில் தரைமட்டத்தில் உள்ள பல மின்பெட்டிகள் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி, அதனுள் இருக்கும் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டும், வயர்கள் சாலைகள் அல்லது நடைபாதை ஓரங்களிலும் கிடக்கிறது. இதனை பொதுமக்கள் கவனிக்காமல் மிதித்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும். அதேநேரத்தில், மழைக்காலத்தில் மின் பெட்டிகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கும். இதனால், மின் வயர்கள் தண்ணீரில் பட்டு, அவ்வழியாக நடந்து செல்பவர்களின் உயிரை அது பறித்துவிடும் அபாயம் இருக்கிறது. என்னதான், தரைமட்டத்தில் இருக்கும் மின் பெட்டிகளை கொஞ்சம் உயரத்தில் வைத்தாலும், அந்த மின் பெட்டிகள் முழுமையாக மூடப்பட்டு, பாதுகாப்பாக இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். இதனை அதிகாரிகள் முறையாக கவனித்து எங்கெல்லாம், மின் பெட்டிகள் பராமரிப்பு இன்றி திறந்த நிலையில் இருக்கிறதோ அதனை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
போயஸ் கார்டனை சேர்ந்த சுரேஷ் கூறும்போது, ‘சென்னையில் உள்ள பெரும்பாலான மின்பெட்டிகள் கதவுகள் இன்றி, துருப்பிடித்து, மின்கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு காட்சி அளிக்கிறது. இதனால், மின் கசிவு, மின் தடை, மின் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த விபத்துகளால், மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், தற்போது மழை பெய்து ஒரு சில இடங்களில் மின் பெட்டிகளை சுற்றி மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால், மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. உடனடியாக சென்னையில் இதுபோன்று அபாய நிலையில் இருக்கும் மின் பெட்டிகளை சீரமைக்க வேண்டும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT