Published : 16 Nov 2023 04:45 AM
Last Updated : 16 Nov 2023 04:45 AM

தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப்படம்

சென்னை: வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி நகர்வதாகவும், தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியவானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்குவங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கி.மீ. தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ. 16) ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிசா கடலோர பகுதிகளில் நிலவக்கூடும்.

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20, 21-ம்தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். படிப்படியாக மழை குறையும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் கடந்த அக்.1 முதல்நவ.15 வரை சராசரியாக 24 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 27 செ.மீ. மழை பதிவாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x