Published : 16 Jan 2018 12:38 PM
Last Updated : 16 Jan 2018 12:38 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலன்று கோலாகலமாக நடைபெறும் மாடு விரட்டும் நிகழ்ச்சி கொஞ்சம், கொஞ்சமாக களையிழந்து வருகிறது.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில்தான் கோலாகலமாகக் கொண்டாடப்படும். கிராம மக்கள் தங்கள் வாழ்வில் ஒன்றிப்போன மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் தினத்தில் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசுவார்கள். பின்னர் ஊர் கோவிலில் இருந்து மாடுகள், மாட்டு வண்டிகள் ஊர்வலம் புறப்படும். இந்த ஊர்வலம் ஊரின் எல்லையில் உள்ள கோயிலுக்குச் சென்று பின்னர் ஊரைச் சுற்றிவந்து தொடங்கிய இடத்தில் முடிவுறும்.
மாடுகள் பூட்டிய வண்டியில் சிறுவர்கள் புத்தாடை அணிந்து செல்வர். ஆண்கள் வேட்டிச் சட்டையும், பெண்கள் புடவை மற்றும் பாவாடை தாவணியிலும் மாடுகளுடன் ஊரை வலம் வருவர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மாடு விரட்டும் நிகழ்ச்சி என்றே அழைக்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு எவ்வளவு பிரபலமானதோ அதேபோல் இந்த மாடு விரட்டும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட வட மாவட்ட கிராமங்களில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் வேலை செய்பவர்கள் கூட தங்கள் கிராமத்துக்கு வருவர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த மாடு விரட்டும் நிகழ்ச்சி களையிழந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் இந்த ஊர்வலமே நடப்பதில்லை. ஆங்காங்கே நடைபெறும் ஊர்வலத்திலும் மாடுகளுக்கும், மாட்டு வண்டிக்கும் பதில் கார்கள், டிராக்டர்கள், மினி லாரிகள் போன்றவையே ஊர்வலமாக வருகின்றன.
குறிப்பாக தற்போது வீடுகளில் பசுக்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. வண்டியிழுக்கும் மாடுகள் குறைந்து வருகின்றன. அதேபோல் மாட்டு வண்டிகளின் பயன்பாடும் குறைந்து வருகிறது. தாங்கள் வளர்க்கும் பசுக்களுக்கு வீடுகளிலேயே படையல் நடைபெற்றுவிடுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை தொழிற்சாலைகள் பெருக்கத்தால் பலர் விவசாயத் தொழிலை கைவிட்டு தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். இதன் காரணமாக வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாதவாறு ரியல் எஸ்டேட் தொழிலும் அதிகம் உள்ளது. இதனால் விவசாய சாகுபடிப் பரப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இருக்கும் விவசாய நிலத்திலும் டிராக்டர் போன்ற கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன. பொருட்களை ஏற்றிச் செல்ல குட்டி யானை எனப்படும் மினி லாரிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் மாடுகள், மாட்டு வண்டிகளின் பயன்பாடுகள் இயல்பாகவே குறைந்துவிட்டன. இதனால் கிராமங்களில் மாடு விரட்டும் நிகழ்ச்சியும் களையிழந்து வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறும்போது, ‘நத்தைப்பேட்டையில் மாடு விரட்டும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அனைவர் வீட்டிலும் மாடும், மாட்டு வண்டியும் இருக்கும். தற்போது பசுமாடுகள் மட்டுமே உள்ளன. ஒரு சிலர் வீட்டில் மாடு இருந்தாலும் வண்டி இருப்பதில்லை. இதனால் பல கிராமங்களில் இந்த மாடு விரட்டும் ஊர்வலம் நடப்பதே இல்லை. பழமையை விட விரும்பாத சில கிராமங்களில் மட்டுமே மக்களால் ஆங்காங்கே நடத்தப்படுகிறது. அங்கும் ஊர்வலத்தில் மாடுகளை விட கார்களும், டிராக்டர்களும்தான் அதிகம் பங்கேற்கின்றன’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT