Published : 15 Nov 2023 04:14 PM
Last Updated : 15 Nov 2023 04:14 PM
மதுரை: குலசேகரம் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் விடிசி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை மயக்கவியல் மருத்துவ படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்தார்.
இந்நிலையில் கல்லூரி விடுதியில் தசைகளை தளர்வடையச் செய்யும் ஊசியை செலுத்தி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் தனக்கு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொந்தரவு அளித்தாகவும், தன் தற்கொலைக்கு பரமசிவம், மருத்துவ மேற்படிப்பு மாணவர் ஹரிஷ் மற்றும் மாணவி பிரீத்தி ஆகியோர் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பரமசிவம், ஹரிஷ், பிரீத்தி ஆகியோர் மீது குலசேகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பரமசிவம் கைது செய்யப்பட்டார். ஹரிஷ், பிரீத்தி உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் பெற்றனர். பரமசிவம் உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், வழக்கில் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும். எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். இதையடுத்து நீதிபதி, மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பரமசிவத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT