Published : 19 Jan 2018 11:35 AM
Last Updated : 19 Jan 2018 11:35 AM
மதுரை நகரில் சிக்னல்கள், சோதனைச் சாவடிகளில் விதிமீறல், சந்தேகத்துக்குரிய வாகனங்களை பிடிக்கும் வகையில் நம்பர் ‘பிளேட்’ களை எளிதில் கண்டறிய உதவும் நவீன கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.
மதுரை நகரில் 26 போக்குவரத்து சிக்னல்கள், நகர் எல்லையை கடக்கும் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் உள்ளன. இவற்றில் கோரிப்பாளையம், காளவாசல், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம் ஆகிய சிக்னல்கள் வழியாக அதிகமான வாகனங்கள் செல்கின்றன.
சிக்னல்களில் எல்லைக் கோடுகளை கடந்து சென்று நிறுத்துவது, பச்சை விளக்கு வருவதற்குள் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றனர். இருப்பினும், சில நேரத்தில் விதிமீறுவோர் தங்களது வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக செல்வதால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சந்தேக வாகனங்களை தேடிப்பிடிப்பதில் போலீஸார் சிரமம் அடைகின்றன.
இந் நிலையில் வீதிமீறல், கடத்தல், சந்தேகத்திற்குரிய வாகனங்கள் ஆகியவற்றைப் பிடிக்க, சம்பந்தப்பட்ட வாகனங்களின் நம்பர் ‘ பிளேட் ’களை துல்லியமாகப் படமெடுக்கும் நவீன (கேப்சர்) கேமராக்களை சிக்னல்கள், சோதனைச் சாவடிகள், முக்கிய சாலைகளில் பொருத்த மதுரை நகர் காவல் ஆணையர் அலுவலகம் திட்டமிட்டது.
இது குறித்த திட்ட அறிக்கை ஒன்றை போக்குவரத்து பிரிவு போலீஸார் தயாரித்து காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினர். இதை பரிசீலித்த காவல் துறை தலைமை அலுவலகம் அதிநவீன கேமராக்களை பொருத்த சுமார் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.
இது குறித்து போக்குவரத்து பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
மதுரை நகர் சிக்னல்களில் ஏற்கெனவே கேமராக்கள் பொருத்தப்பட்டு, வீதி மீறல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக நம்பர் ‘பிளேட்’ களை துல்லியமாகப் படமெடுக்கும் கேமரா மூலம் வீதிமீறல் வாகனங்களின் பதிவெண்களை வைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் உரிமையாளரை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
மதுரையில் முதல் கட்டமாக சோதனைச் சாவடிகள், அதிக வாகனங்கள் செல்லும் முக்கிய சாலைகளில் இக்கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT