Published : 15 Nov 2023 12:35 PM
Last Updated : 15 Nov 2023 12:35 PM
உடுமலை: உடுமலை அருகே கூட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தரைப்பாலத்தை கடக்க முடியாமல் தளிஞ்சி மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் உள்ளது சின்னாறு. இரு மாநில எல்லைகளுக்கு உட்பட்ட இப்பகுதியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் தளிஞ்சி மலைக் கிராமம் உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அதனை ஒட்டிய தளிஞ்சி வயல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இவ்விரு கிராமங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாயும் தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகிய ஆறுகள் சந்திக்கும் கூட்டாற்றை கடந்து தான் சின்னாறு பகுதிக்கு வர வேண்டும். இதற்காக கூட்டாற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தியே கிராம மக்கள் வந்து சென்றனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கூட்டாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் கூட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பருவமழைக் காலங்களில் கூட்டாற்றில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். அச்சமயங்களில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு கயிறு கட்டி, அதை பிடித்துக்கொண்டும், பரிசல் மூலமும் கடந்து செல்வோம். 4 ஆண்டுகளுக்கு முன் இதே பாணியில் கூட்டாற்றை கடக்க முற்பட்ட 7 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, பின் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அந்த சம்பவத்துக்குப் பிறகு வெள்ளத்தின் போது, கூட்டாற்றை கடந்து செல்ல முற்படுவதில்லை. கேரள மாநில எல்லைக்குள் சென்று, அதன் பின்பே சின்னாறு பகுதியை அடைய வேண்டும். சில சமயங்களில் அம்மாநில வனத்துறையினர் எல்லையை அடைத்து விடுகின்றனர். அப்போது அவசரத் தேவைக்கும்கூட வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது.
கூட்டாற்றின் இடையே உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. கடந்த சில நாட்களாககூட்டாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால், மறுகரைக்கு செல்ல முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உயர்மட்ட பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT