Published : 29 Jul 2014 08:30 AM
Last Updated : 29 Jul 2014 08:30 AM
சென்னை பெருநகர காவல்துறையில் 135 காவல் நிலையங்கள் உள்ளன. சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் இணைத்து புதியதொரு ரோந்து முறை தொடங்கப்பட்டது. இப்படி ரோந்து பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படும் போலீஸ்காரர்கள் 'பீட் ஆபீஸர்கள்' என அழைக்கப்படுகின்றனர். இவர் களுக்கு தனியாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட 403 மோட்டார் சைக்கிள்களை முதல்வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த மோட்டார் சைக்கிள்களில் சைரன் மற்றும் ஒளிரும் விளக்குகளும் இருக்கும்.
குறுகிய தெருக்களில் கூட ரோந்து செல்லும் பீட் ஆபீஸர்கள் கடந்த 5 மாதங்களில் 440 குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். 13 செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி சென்று பிடித்துள்ளனர். ரோந்து செல்வது மட்டுமே இவர்களின் பணி என்பதால் ஒரே தெருவில் இரவிலும், பகலிலும் திடீரென ரோந்து வருகின்றனர். இதனால் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தப் புதிய ரோந்து முறை செயல்பாட்டுக்காக, சென்னை முழுவதும் 403 ரோந்து பிரிவுகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் சுழற்சி முறையில் மூன்று காவலர்கள் 24 மணி நேரமும் ரோந்து பணி செய்கின்றனர். தற்போது ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தொடங்கப்பட்டுள்ள புதிய ரோந்து முறை, எதிர்காலத்தில் சென்னை காவல் பணியில் நிரந்தரமான ஒன்றாக இருக்கும்.
இது குறித்து அடையாறு, திருவான்மியூர், வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர் பகுதி மக்களிடம் கேட்டபோது, "எங்கள் வீட்டு முன்பு போலீஸ்காரர்கள் ரோந்து செல்வதை பார்க்கும்போது, மனதிற்குள் அச்சம் மறைந்து ஒரு தைரியம் வருகிறது. இரவில் மது குடித்துவிட்டு பிரச்சினை செய்பவர்கள் கூட மோட்டார் சைக்கிளில் சைரன் ஒலி மற்றும் ஒளிரும் விளக்குகளுடன் வரும் போலீஸாரை கண்டு ஓடி மறைகின்றனர். இதை நேரில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கிறோம். மோட்டார் சைக்கிள் ரோந்து பணியை இன்னும் மேம்படுத்தி செயல்பட்டால் குற்றங்களின் எண்ணிக்கை மேலும் குறையும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT