Published : 15 Nov 2023 10:20 AM
Last Updated : 15 Nov 2023 10:20 AM

தொடர் கனமழையால் வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி

தண்ணீர் வரத்தால் வேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரி.

கடலூர்: நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் சென்னை குடிநீருக்கு தொடர்ந்து இங்கிருந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளவு 47.50 அடி ஆகும். வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். மேலும் மழை காலங்களில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஏரியை வந்தடையும். இந்தாண்டு மேட்டூர் அணை, தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது.

இதனால் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. ஈரோடு மற்றும் கீழணைக்கு மேல் பகுதியில் சுமார் 80 கி.மீ தூரத்தில் உள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் நேற்று முதல் கீழணைக்கு விநாடிக்கு சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 9 அடி உள்ள கீழணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் நேற்று கீழணையில் இருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 1,614 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், காட்டாறு மற்றும் செங்கால் ஓடை வழியாக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து வருகிறது. மேலும் வீராணம் ஏரி பகுதியில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று காலை வரை 6 மணி வரை 8 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் நேற்று காலை முதல் மதியம் 4 மணி வரை 4.8 செமீ மழை பெய்துள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதுபோல ஏரிக்கு தண்ணீர் வரும் கீழணை பகுதி, ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்தால் ஏரி விரைவில் நிரம்பிவிடும். நேற்று ஏரியின் நீர்மட்டம் 44.26 அடியாக உயர்ந்து உள்ளது. சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x