Published : 15 Nov 2023 04:56 AM
Last Updated : 15 Nov 2023 04:56 AM
சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதிதாகவிசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ரவுடி கருக்கா வினோத் மீது வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்.25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நந்தனம் எஸ்.எம். நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் (42) மீது 5 பிரிவுகளில் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
‘‘நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடந்ததால் மன உளைச்சல் அடைந்தேன். என் மகன் 6-ம் வகுப்பு படிக்கிறான். நீட் தேர்வு இருந்தால் அவன் எப்படி டாக்டர் ஆவான். இதனால்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன்’’ என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பும் ஏற்கெனவே அவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். தவிர, அவர் மீது 14 குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளது.
காவல் ஆணையரிடம் மனு: முன்னதாக, ஆளுநர் மாளிகை தரப்பில், ‘பெட்ரோல் குண்டு வீசியவர் மீதுதேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோல் குண்டுவீசப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்’ என்று சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், கருக்கா வினோத் மீது இந்தசட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யாமல், முதலில் புகார் அளித்த கிண்டி போலீஸாரின் புகார் மனுவை ஏற்று அதன்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, போலீஸாரின் செயல்பாட்டை விமர்சித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், ‘தாங்களாககொடுத்த புகாரின் அடிப்படையில்காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஒரு தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போக செய்துள்ளனர். அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி, குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை, தொடங்கும் முன்பேகொல்லப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுக்கு டிஜிபி மறுப்பு: இந்த குற்றச்சாட்டுக்கு டிஜிபி மறுப்பு தெரிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட்டதாக ஆளுநர் மாளிகைதரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டையும் மறுத்த டிஜிபி, ‘கருக்கா வினோத் தனியாக வந்தே பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்’ என்று கூறி, அதற்கான வீடியோ பதிவு காட்சிகளையும் வெளியிட்டார்.
இந்த சூழலில்தான் தற்போது, இந்தவழக்கை என்ஐஏ கையில் எடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த வழக்கில் புதிதாக விசாரணையை தொடங்க என்ஐஏ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரவுடி கருக்கா வினோத் மீது புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT